தேர்தல் கூட்டணி என்பது கொள்கை கூட்டணியா?

ஒருமுறை திராவிட கழக தலைவர் கி.வீரமணி, 'கொள்கை கூட்டணி, அரசியல் கூட்டணி என இருவகை கூட்டணிகள் உள்ளன. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை. கொள்கை கூட்டணியில் நிரந்தர நண்பர்கள் உண்டு; நிரந்தர எதிரிகளும் உண்டு' என்று குறிப்பிட்டார்.

தேர்தல் கூட்டணி என்பது வீரமணி குறிப்பிட்டதை போல் அரசியல் கூட்டணி தான். அது ஓட்டு வங்கி அடிப்படையில் தான். பா.ஜ., ஆட்சிக்கு என் மதிப்பெண் பூஜ்ஜியம் தான் என்று சொன்ன பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இன்று பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.

வாரிசு அரசியலை எதிர்த்து தனிக்கட்சி துவங்கிய வைகோ, இன்று வாரிசு அரசியலுக்கு உதாரணமாக சொல்லப்படுகின்ற அதே தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துஇருக்கிறார்.

இப்போது, வைகோ தன் மகனை வாரிசு அரசியல் முறையில், தேர்தல் அரசியலை அவருக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். வைகோ மகன் துரை “நான் சுயமரியாதைக்காரன், உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட மாட்டேன்,” என்கிறார். இதுவும் அரசியல் கூட்டணி தான்.

ஆண்டுதோறும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு வீர வணக்க நாள் அன்று பொதுக்கூட்டம் போடுவது திராவிட கட்சிகள் வழக்கம். ஹிந்தி எதிர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் ஆட்சியில் குண்டடிபட்டு இறந்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் அந்த கூட்டம் நடக்கும். ஆனால், இப்போது அதே காங்கிரஸ் கட்சியுடன் தான் தி.மு.க., தொடர்ந்து கூட்டணி வைத்து வருகிறது. இதுவும் அரசியல் கூட்டணி தான்.

இப்போது சனாதனத்தை எதிர்த்து பேசுகின்ற தி.மு.க., ஒருமுறை பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து அமைச்சரவையிலும் பங்கேற்றது. அதுவும் அரசியல் கூட்டணி தான். அப்போது தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'திராவிட கழகம் மாதிரி ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும் ஒரு சமுதாய இயக்கம்தான்' என்று சொன்னார். இதற்கு காரணம் அவர் வைத்திருந்த அரசியல் கூட்டணி தான்.

தேர்தல் ஆசை வந்ததும் தன் தனி தமிழ்நாடு கொள்கையை கைவிட்டு, 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி' என்றார் அண்ணாதுரை. 1967ம் ஆண்டு தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டணி வைத்து பிராமண எதிர்ப்பையும் கைவிட்டார் அண்ணாதுரை. காரணம் தேர்தல் கூட்டணி தான். ராஜாஜியும் பூணுாலை கையில் பிடித்துக் கொண்டு தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். காரணம் தேர்தல் கூட்டணி தான்.

இந்திராவின் அவசர நிலை அறிவிப்பை கடுமையாக எதிர்த்து ஆட்சியை இழந்து மிசா கொடுமைகளுக்கு ஆளான தி.மு.க., மீண்டும் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக' என்று, அழைத்தார் கருணாநிதி.

கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி போட்டி போடுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் டி.ராஜாவின் மனைவி வேட்பாளர். ஆனால், தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரசும் கூட்டணி. இதுவும் தேர்தல் கூட்டணி தான்.

இதைத்தான் வீரமணி குறிப்பிட்டார். 'இண்டியா' கூட்டணி என்பது எதிர்க்கட்சிகள் தயாரித்த அவியல். இப்போது அந்த கூட்டணியில் காங்கிரஸ் ஆதரவு கட்சிகள் எத்தனை என்பது பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டி இருக்கிறது.

கடந்த, 1969ல் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? மாநில சுயாட்சிக்கு என்ன வழி? என்பது பற்றி எல்லாம் ஆராய அன்றைய முதல்வர் கருணாநிதி, ராஜமன்னார் தலைமையில் ஓர் உயர்நிலை குழுவை அமைத்தார். அந்த குழு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்பதை வலுவான எடுத்துக்காட்டுகளுடன் ஆணித்தரமாக பரிந்துரை செய்தது.

கடந்த, 1971ல், அந்த அறிக்கை, அன்றைய பிரதமர் இந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது இந்திரா மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசித்து தன் முடிவை சொல்வதாக தெரிவித்தார். ஆனால், இந்திரா சொன்ன அந்த மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆட்சி செய்தது. அந்த முதல்வர்களுக்கு, 'ஆமாம் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்' என்ற சொல்ல துணிச்சல் இல்லை.

கடந்த, 1974ல், தமிழக சட்டசபையில் ஐந்து நாள் விவாதத்திற்கு பின், ராஜமன்னார் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், மத்திய அரசு அந்த தீர்மானத்தை சட்டை செய்யவே இல்லை. இன்றைக்கு இருக்கும் தி.மு.க.,வினர் எத்தனை பேருக்கு ராஜமன்னார் குழு அறிக்கை பற்றி தெரியும் என்பது சந்தேகம் தான்.

இப்போது தி.மு.க., மீண்டும் கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும் என்று பேசுகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகள் தி.மு.க., அவர்களுடன் கூட்டணியில் இருந்தது. ஆட்சி அதிகாரத்தையும் பகிர்ந்து கொண்டது. அப்போதே அதை செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. காரணம், எல்லாம் இந்த பாழாய் போன தேர்தல் கூட்டணி தான்.

இதே போல் மாநிலத்திற்கு அதிக அதிகாரம், கவர்னர் அதிகாரம் குறைப்பு எல்லாம் தி.மு.க., அப்போது எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் கவர்னர் பரிந்துரையில் கருணாநிதி அரசு ஆட்சி கலைக்கப்பட்டது.

இன்னொரு திராவிட கட்சியான அ.தி.மு.க.,வும் மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வேண்டுமென்று பேசியவர்கள் தான் தன் கட்சிக் கொள்கையான அண்ணாயிசம் பற்றிய கொள்கை விளக்க குறிப்பில் 'இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற அரசியல் சாசனம் முழுமை பெற்ற இணையாட்சி அரசியல் சாசனம் அல்ல. இப்போதிருக்கும் அரசியல் சாசனத்தில் மத்திய அரசுக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன' என்று குறிப்பிட்டு இருந்தார் எம்.ஜி.ஆர்., மேலும், காங்கிரஸ், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க.,வும் அரசியல் கூட்டணி தான் வைத்திருந்தது.

அதே சமயம், பா.ஜ., கூட்டணி எப்போதும் கொள்கை கூட்டணி தான். அவர்கள் ராமர் கோவில், 370 பிரிவு, காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், பொது சிவில் சட்டம் இவற்றுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டது இல்லை. அவர்கள் கொள்கை எல்லாம் எப்போதும் வெளிப்படை. மக்கள் அவர்களை விரும்புவதற்கு அதுவும் ஒரு காரணம்.-ஜான்சன்,பத்திரிகையாளர்


Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
14-ஏப்-2024 11:10 Report Abuse
Kasimani Baskaran தேர்தல் கூட்டணி என்பது கொள்கை ரீதியானது அல்ல.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்