400 தொகுதிகளில் வெற்றி என்பது, வாய்ச்சொல் கிடையாது: அண்ணாமலை
"இண்டியா கூட்டணியில் உள்ள குடும்ப கட்சிகள், தங்களின் வாரிசுகளை பதவியில் அமர்த்தும் கட்சிகளாக உள்ளன" என, நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
கன்னியாகுமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரித்துப் பார்க்க முடியாது. குமரி மாவட்டத்துக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அள்ளிக் கொடுத்தவர், மோடி. 1995ம் ஆண்டு ஏக்தா யாத்திரை துவங்கியபோது அதில் முக்கிய பங்கு வகித்தவர்.
'இண்டியா' கூட்டணியில் குடும்ப கட்சிகள், தங்களின் வாரிசுகளை பதவியில் அமர்த்தும் கட்சிகளாக உள்ளன. வரும் லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் என்பது வெறும் வாய்ச்சொல் கிடையாது. அது, இந்திய மக்களின் உணர்வு. அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் அவர் இங்கு வந்திருக்கிறார். 142 கோடி மக்களின் விஸ்வகுருவாக மோடி இருக்கிறார்.
நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழித்து, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்குடன் பிரதமர் உழைத்து வருகிறார். 3வது முறையாக மீண்டும் மோடி பிரதமர் ஆவார்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது;
தமிழகத்தின் வளர்ச்சிகாக கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாயை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். அவர் பிரதமர் ஆன பின்பு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை. மீனவர் நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தினார்.
மீனவர் நலனுக்காக 38,500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குமரி, தூத்துக்குடியை சேர்ந்த 5 மீனவர்களை ஒரே தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி மீட்டார். மீனவர் நலனில் உண்மையான அக்கறையுள்ள தலைவராக மோடி திகழ்கிறார்.
2021 சட்டசபை தேர்தலில் வேல் யாத்திரை மூலம் 4 எம்.எல்.ஏ.,க்கள் வென்றனர். என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும். வரும் தேர்தல் மூலம் 3வது முறையாக ஆட்சி அமைப்பது என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
இவ்வாறு எல்.முருகன் பேசினார்.
வாசகர் கருத்து