'என்ன ஜாதி என கேட்டு சீட்டு தந்தார் முதல்வர்'
'நீ என்ன ஜாதி என்று கேட்டுத்தான், தேர்தலில் போட்டியிட முதல்வர் வாய்ப்பு வழங்கினார்' என, வேலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் பேசி, கட்சி தலைமையின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளார்.
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், வேலுார் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு, இம்முறை வாய்ப்பு மறுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் வேட்பாளராகி விட்டார். தந்தையை போலவே, மகனும் வாய்க்கு வந்ததை பேசி, வம்பில் மாட்டுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.
சமீபத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற கதிர் ஆனந்த், அங்கிருந்த பெண்கள் பளபளப்பாக இருப்பதற்கு, அரசு கொடுத்த 1,000 ரூபாயில் வாங்கிய பேர் அண்டு லவ்லி, பான்ஸ் பவுடர், சிங்கார் குங்குமம் தான் காரணம் என பேசினார். இதற்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், யு டியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'வேட்பாளர் நேர்காணலின் போது, முதல்வர் ஸ்டாலின், என்னை அழைத்து, நீ என்ன ஜாதி என்று கேட்டார். வன்னியர் என்று கூறினேன்' என்று கதிர் ஆனந்த் கூறியுள்ளார். வன்னியர்கள் ஓட்டுகளை கவரும் வகையில் அவர் பேட்டி அளித்தாலும், 'முதல்வர் ஜாதியை பார்த்துதான் சீட் கொடுக்கிறாரா' என்ற சர்ச்சையை இப்போது கிளப்பி விட்டுள்ளனர். 'முதல்வர் கிண்டலாக கேட்டதை, இப்படி வெளிப்படையாக சொல்லலாமா?' என, தி.மு.க., தலைமையின் கண்டிப்புக்கும், கதிர் ஆனந்த் ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து