நுாறு சதவீத ஓட்டுகளை உறுதி செய்வோம் :வலிமையான இந்தியாவை இறுதி செய்வோம்!


நம் வாழ்க்கையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிச்சயிக்கப் போகும் தேர்தல் வரப்போகிறது. தேடல் மிகுந்த வாழ்வில் தான் சுவை இருக்கும். இது நம் தேசத்தை வழி நடத்தப் போகும் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். வலிமையான பாரதத்தை வடிவமைக்க மற்றொரு வாய்ப்பு கூடியிருக்கிறது.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பது நமக்கு தெரியும். நவீன இந்தியா, 1950 ஜன., 26 முதல் துவங்குகிறது. இந்திய அரசியலமைப்பு பிரிவு 324ன் படி இந்தியாவில் தேர்தலை சுதந்திரமாக, நியாயமாக, நடத்த தன்னிச்சையான தேர்தல் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

நோட்டாஉலகில், 'நோட்டா' அறிமுகப்படுத்திய 14வது நாடு இந்தியா. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் உள்ள வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் தேர்வு செய்ய விருப்பம் இல்லை என்றால் வாக்காளர்கள், மேற்கண்ட எவரும் இல்லை - NOTA - None Of The Above என்ற பட்டனை அழுத்தி தெரிவிக்கலாம். இந்திய தேர்தல் நடத்தை விதிகள் - 1961 விதி எண் 49--ஓ இந்த முறை பற்றி விவரிக்கிறது.

இப்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயருக்கு நேரே உள்ள பட்டனை அழுத்தி ஓட்டு போடுகிறோம்.

ஒருவர் தாம் செலுத்திய ஓட்டு சரியானபடி பதிவாகியுள்ளதா என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பினை 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது. இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக 'விவிபேட்' என்று குறிப்பிடுகின்றனர்.

நம் கடமைமக்கள் ஓட்டுப் போட்டு தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பது, தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில், இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் பராந்தக சோழன் காலத்திலேயே, குடவோலை முறை வாயிலாக துவங்கிவிட்டது. அதாவது தமிழகத்தில் தேர்தல் பற்றிய விழிப்புணர்வு என்பதெல்லாம், 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சமாசாரம்தான். ஒவ்வொரு கால கட்டத்திலும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் ஓட்டளிப்பதற்கும், விதிமுறைகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.

எல்லா காலங்களுக்கும் ஏற்ற மாதிரி, ஒரே மாதிரியான தேர்தல் நடைமுறை இருந்ததில்லை.

காமராஜர் காலத்தில், சொத்து வைத்திருப்பவர்கள், வரிகட்டுபவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிமுறை இருந்திருக்கிறது. சொத்து இல்லாமல், வரி கட்டாமல், தேர்தலில் போட்டியிட முடியாமல் காமராஜர் தவித்ததும், நண்பர் உதவி செய்ததும் தனிக்கதை.

விரல் நுனியில் விழிப்புணர்வுநவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில் முக்கியமாக செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இருக்கிறோம். விரல் நுனியில் விழிப்புணர்வு வந்து சேருகிறது. விரல் நுனியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும்.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு நாம் என்ன மாதிரியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்? வெறுமனே ஓட்டளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தருவதைவிட, எப்படி ஓட்டளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும், ஏன் ஓட்டளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் வழங்குவதுதான் அவசியமானது.

ஒரு தேர்தல் வெற்றிகரமாக நடந்திருக்கிறது என்றால், அத்தேர்தலில் 100 சதவீத ஓட்டு பதிவாகி இருக்க வேண்டும். தேர்தல் கமிஷனின் பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின், இப்போதுதான் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் இதை நாம் பார்த்தோம். ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து வாட்ஸாப் அனுப்புகிறோம். ஆனால், எத்தனை பேர் ஓட்டுச் சாவடிக்கு சென்று சென்று ஓட்டளிக்க தயாராக இருக்கிறோம்? பெரும்பாலும் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதோடு நின்று விடுகிறோம்.

ஆன்லைனில் ஓட்டுபடித்தவர்கள், முதலாளிகள் வரிசையில் நின்று ஓட்டளிக்க யோசிக்கின்றனர். தேர்தல் நாள் அன்றுகூட முக்கியமான வேலையை வைத்துக்கொண்டு வேகவேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றனர். மற்ற வேலைகளை விட அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்பவர்களை தீர்மானிக்க நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

எல்லா வேலைகளையும் குறுக்கு வழியில் சென்று சாதித்து விடுபவர்களுக்கு ஓட்டளிப்பதற்கு குறுக்கு வழி இல்லை என்பது கவலையாக இருக்கிறது. கோவில்களில் கூடுதல் பணம் கொடுத்தால் சீக்கிரம் சிறப்பு தரிசனம் கிடைத்து விடுகிறது. மருத்துவமனைகளில் வி.ஐ.பி., நுழைவாயில் வழியாக விரைவாக போய்விடலாம்.

தியேட்டர்களில் முன்பதிவு செய்து நேராக இருக்கைக்கு சென்று, படம் பார்த்துவிட முடியும். இப்படியே நாம் பழகிவிட்டதால் ஓட்டுப்போட மட்டும் வரிசையில் நிற்கவேண்டும் என்றால் சிரமமாக இருக்கிறது.

ஆன்லைனில் ஓட்டுப்போடும் வசதியை அரசு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுஉள்ளன. அந்த வசதி வருகிறவரை நாம் வரிசையில் நின்று ஓட்டளிக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் நாம் எதிர்பார்க்கிற அரசு அமையாமல் போய்விடும்.

பெண்கள்பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்களும், அத்துமீறல்களும் அறவே அழிக்கப்பட வேண்டும். இவற்றை உறுதியோடு முன்மொழிபவர்களை அடையாளம் கண்டு ஓட்டுப் போட வேண்டும். இவை தவிர இளைஞர் நலன், சுகாதாரம் என்று இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

ஆனாலும் இவை முக்கியமானவை. இவற்றை மனதில் கொண்டு வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்த எவரும் வாக்காளராக தன் பெயரை பதிவு செய்யலாம். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

எனவே அந்த வாய்ப்பை, உரிமையை இழந்து விடாதீர்கள். தேர்தல் அறிக்கைகள் பற்றியும், கொள்கைகள் பற்றியும் விழிப்புணர்வு பெற்றவர்கள் படித்தவர்களும், அனுபவசாலிகளும்தான். அவர்கள் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தால்தான், நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடையச் செய்யும் அரசு அமையும்.

உங்களுக்குத் தேவையான அரசு அமைய வேண்டுமானால், நீங்கள் தான் ஓட்டளிக்க வேண்டும். 100 சதவீத ஓட்டுகளை உறுதி செய்வோம்! வலிமையான இந்தியாவை இறுதி செய்வோம்!

-ஆதலையூர் சூரியகுமார், எழுத்தாளர், கட்டுரையாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்