நாட்டுக்கு சேவை செய்வது என்பது இதுதானா: காங்கிரசை சாடிய மோடி
"நாடு முழுவதும் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் தான் எனக்கு எதிராக இண்டியா கூட்டணி என்ற பெயரில் ஒன்று கூடுகிறார்கள்" என, பிரதமர் மோடி பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் கரோலியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:
ஜூன் 4ல் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை இந்தக் கூட்டத்தை வைத்தே தெளிவாக உணர முடிகிறது. நாட்டில் வறுமையை ஒழிப்பதாக நீண்டகாலமாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்து வந்தது. ஆனால், பா.ஜ., அரசு 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்தது.
பணம் சம்பாதிப்பதையே முக்கிய குறிக்கோளாக காங்கிரஸ் வைத்திருந்தது. அதை சேவை மற்றும் கடமையின் ஒரு பகுதியாக பா.ஜ., கருதுகிறது. நான் ஓய்வெடுக்கப் பிறந்தவன் அல்ல. எனது இலக்கு பெரிதாக இருப்பதால் கடுமையாக உழைக்கிறேன். இவை குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையவை.
ராஜஸ்தானில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் தான் எனக்கு எதிராக இண்டியா கூட்டணி என்ற பெயரில் ஒன்று கூடுகிறார்கள். நான் ஊழலை அகற்றுவேன் என்கிறேன். அவர்கள் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுங்கள் என்கிறார்கள்.
'கச்சத்தீவில் யாராவது வசிக்கிறார்களா?' என காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேட்கிறார். அப்படியானால் யாரும் வசிக்காத பகுதி என்றால் அதனை கொடுத்துவிடலாம் என்று அர்த்தமா?
ராஜஸ்தானில் பாலைவனம் இருக்கிறது. இதற்கு யாராவது உரிமை கொண்டாடினால் காங்கிரசின் பதில் என்ன. நாட்டுக்கு சேவை செய்வது என்பது இதுதானா?
இது தான் காங்கிரசின் மனநிலை. அவர்களின் சிந்தனை குறுகிவிட்டது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பாதுகாப்பு எப்படியிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து