ராபர்ட் புரூஸுக்கு கைகொடுத்த கனிமொழி: நெல்லையில் ஜாதி சங்கங்கள் வளைப்பு
திருநெல்வேலியில் காங்., வேட்பாளர் வெளியூர்க்காரர் என எதிர்ப்பு நிலவுவதால், அதை சரிக்கட்ட கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் தி.மு.க., கூட்டணி சார்பில், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார்.
கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு உள்ளதாலும், கூட்டணி கட்சியான தி.மு.க.,வினர் ஒத்துழைப்பு இல்லாமல் தடுமாறுவதாலும் களத்தில் புரூஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல் கூட்டணியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு, காங்., தலைமை வாயிலாகவும், உளவுத்துறை வாயிலாகவும் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது.
ஜாதி பலம் தேவை
இதையடுத்து, களத்தை சாதகமாக திருப்பும் வகையில் பல்வேறுவிதமானஉத்தரவுகளை கட்சியினருக்கு பிறப்பித்திருக்கிறார் முதல்வர்.
இதனால், துவக்கத்தில் சுணக்கமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,வினர், தற்போது வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்காக வேகமாக பணியாற்றி வருகின்றனர்.
அதோடு, ஜாதி ரீதியிலான ஓட்டுகளில் கடந்த தேர்தலைக் காட்டிலும் இம்முறை தி.மு.க., கூட்டணிக்கு குறைவான ஓட்டுகளே கிடைக்க வாய்ப்புள்ளது என்ற தகவலும், அடுத்தடுத்த கட்டங்களில் முதல்வருக்கு போய் சேர்ந்தது.
அதனால், அதையும் சரிக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த முதல்வர் ஸ்டாலின், இதற்காக துாத்துக்குடி மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி இருவரையும், திருநெல்வேலி தொகுதிக்குச் சென்று, ஜாதி ரீதியிலான ஓட்டுகளை காங்., வேட்பாளருக்கு பலப்படுத்திக் கொடுக்க வேண்டியது உங்கள் பணி என்று சொல்லி, இருவரையும் களம் இறக்கி உள்ளார்.
முதல்கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மீனவர் கிராமங்களுக்கும், ஹிந்து நாடார் பகுதிகளுக்கும் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன், அங்கிருக்கும் பல்வேறு சங்கங்களின் தலைவர்களை சந்தித்துப் பேசி, தி.மு.க., மற்றும் காங்., மீது இருந்த அதிருப்தியை குறைத்ததோடு, தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டார். தொடர்ந்து, திருநெல்வேலி பகுதிகளிலேயே சுற்றி வருகிறார்.
இது குறித்து, லோக்கல் காங்., நிர்வாகிகள் கூறியதாவது:
மீனவர்கள் ஓட்டுகளை அனிதா ராதாகிருஷ்ணன் காங்., தி.மு.க., பக்கம் திருப்பி விட்டாலும், ராபர்ட் புரூஸ் சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ நாடார் பிரிவை சேர்ந்தவர். அ.தி.மு.க., வேட்பாளர் ஜான்சி ராணியும், ஹிந்து நாடார் வகுப்பை சேர்ந்தவர். அதனால், ஹிந்து நாடார்கள் காங்கிரசை புறக்கணிக்கக் கூடும் என்ற தகவல் வந்தது.
நாடார் சங்க சந்திப்பு
அதையடுத்தே, அதை சரி செய்யும் வகையில் கனிமொழி திருநெல்வேலியில் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் முதல்கட்டமாக, தட்சிணமாற நாடார் சங்க அலுவலகத்திற்கு சென்றார்.
உடன், எம்.எல்.ஏ., அப்துல் வஹாப் மற்றும் திருநெல்வேலி மாவட்ட செயலர் மைதீன்கான் சென்றனர்.
அங்கு பேசிய கனிமொழி, 'பா.ஜ., அரசின் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பின் மூலம் வியாபாரிகள் மற்றும் சிறு குறு தொழில் செய்பவர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். அத்தகைய பாதிப்புகள் இனி சரிசெய்யப்படும். சிறு கருத்து வேறுபாடுகளை கடந்து, 'இண்டியா' கூட்டணியை ஆதரிக்க வேண்டும். பா.ஜ., ஹிந்துக்களை ஆதரிப்பதாக கூறுகிறது.
'ஆனால், பா.ஜ., மூலம் பெரும்பான்மை ஹிந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க., அரசு வந்த பிறகுதான் பல்வேறு கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளன. திருவாரூர் தேரோட்டம் நடந்துள்ளது.
'தமிழகத்தில் வியாபாரிகளுக்கும், தென் மாவட்ட மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்றால், அதற்கு ஜாதிய வேறுபாடுகள் இல்லாமல் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் புரூசை ஆதரிக்க வேண்டும்' என்றார்.
அதை ஏற்றுக் கொண்ட தட்சிணமாற நாடார் சங்கத்தினர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து கனிமொழி, திருநெல்வேலி யாதவர் சங்க நிர்வாகிகளையும், திருநெல்வேலி ஐகிரவுண்டில் முஸ்லிம் ஜமாத்தார்களையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
வாசகர் கருத்து