ரயில்வே கேட்டை மூட விடாத அமைச்சர் ஆதரவாளர்கள்
அமைச்சர் கணேசன் பிரசார வாகனம் செல்வதற்காக, ரயில்வே கேட்டை மூட முடியாமல் ஊழியர்கள் தவித்த சம்பவம், விருத்தாசலம் அருகேபரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுார் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத்துக்கு ஆதரவாக விருத்தாசலம் தெற்கு ஒன்றியத்தில், அமைச்சர் கணேசன் நேற்று ஓட்டுசேகரித்தார்.
விருத்தாசலம் - காட்டுக்கூடலுார் சாலையில் உள்ள சின்னகண்டியங்குப்பம் ரயில் பாதையை கடந்து நறுமணம், காணாதுகண்டான் உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, பிரசார வாகனத்தில்அமைச்சர் கணேசன், வேட்பாளர் விஷ்ணுபிரசாத், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் சென்றனர்.
அவர்களின் வாகனத்துக்கு முன்பாக, நுாற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது காலை 10:10 மணிக்கு வரும் காரைக்கால் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்வருகைக்காக, காலை 10:00 மணிக்கு சின்னகண்டியங்குப்பம் ரயில் கேட்டை ஊழியர்கள் மூட முயன்றனர்.
இருசக்கர வாகனங்களில் சென்ற தி.மு.க., தொண்டர்கள், கேட்டை மூட விடாமல், 'அமைச்சர் வருகிறார்; அவர் சென்றதும் கேட்டை மூடுங்கள்' என, ஊழியர்களிடம் வலியுறுத்தினர். திகைத்த ரயில்வே ஊழியர்கள் பாதியளவில் மூடிய கேட்டுடன், பதைபதைப்புடன் காத்திருந்தனர்.
அந்த நேரத்தில், விருத்தாசலத்தில் இருந்து லோடு ஏற்றிய இரண்டு டிப்பர் லாரிகள் ரயில் பாதையை கடந்ததால், ரயில்வே ஊழியர்கள் மேலும் பரபரப்படைந்தனர்.
ஒரு வழியாக பிரச்னை ஏதுமின்றி டிப்பர் லாரிகள் கடந்து சென்ற நிலையில், அதனை தொடர்ந்து வேட்பாளருடன் அமைச்சர் கணேசன் இருந்த பிரசார வாகனமும் சென்றது.
அமைச்சர் வருகையால் கேட்டை மூட முடியாமல், தவித்த ரயில்வே ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஒரு சில நிமிடங்களில் காரைக்கால் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலும் தடையின்றி கடந்து சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வாசகர் கருத்து