ஸ்டாலினுடன் சேர்த்து 4 முதல்வர்கள் உள்ளனர்: பழனிசாமி விமர்சனம்
"அ.தி.மு.க., ஆட்சியை இருண்ட ஆட்சி என ஸ்டாலின் சொல்கிறார். மக்களுக்கு வெளிச்சம் தந்த ஆட்சியாக அ.தி.மு.க., இருந்தது" என, அ.தி.மு.க. , பொதுச் செயலர் பழனிசாமி பேசினார்.
நாமக்கல் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
தி.மு.க., குடும்ப ஆட்சியை நடத்துகிறது. ஸ்டாலினுடன் சேர்ந்து 4 முதல்வர்கள் தி.மு.க.,வில் இருக்கின்றனர். இதனால் தான் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை.
10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு நன்மைகள் கிடைத்தன, அதிகார ஆட்சியாக மட்டுமே தி.மு.க., ஆட்சி இருக்கிறது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது.
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் முதன்மையாக தமிழகம் இருந்தது. தற்போது சீர்கெட்டு நாசமாகிவிட்டது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே கிடையாது. தி.மு.க., ஆட்சியில் தொழில் செய்வதே கேள்விக்குறியாகிவிட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருள்களின் விலை அதிகரித்துவிட்டது. கச்சா எண்ணையை மத்திய அரசு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து 70 சதவீதம் அளவுக்கு அதிக வரிவை விதித்து விற்பனை செய்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
லாரி வாடகை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் கட்டுமானத் தொழில் பாதித்துள்ளது, சொந்த வீடு கட்டுவது இன்று கனவாக மாறும் நிலைக்கு தி.மு.க., ஆட்சி தள்ளிவிட்டது.
எங்கள் ஆட்சியில் விசைத்தறி தொழில் நஷ்டத்தில் இருந்த போதும் தகுந்த இழப்பீடு வழங்கப்பட்டது. இன்று அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறிக்கான மின்கட்டணமும் உயர்ந்துவிட்டது. நுால்விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. ஜவுளி பூங்கா திட்டத்தை கொண்டுவர அ.தி.மு.க., முயற்சித்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததம் அதைக் கிடப்பில் போட்டுவிட்டனர். அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டது, விலை உயர்ந்தாலும் மற்ற மாநிலங்களில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கினோம். வேலையில்லா திண்டாட்டத்துக்கு தி.மு.க., அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார். அந்த நாடு இங்கு முதலீடு செய்ய முன்வரவில்லை. தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக், மகளிருக்கு பைக் மானியம், இலவச லேப்டாப் என பல திட்டங்களைக் கொண்டு வந்தோம்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டங்களை எல்லாம் ஸ்டாலின் நிறுத்திவிட்டார். அ.தி.மு.க., ஆட்சியை இருண்ட ஆட்சி என ஸ்டாலின் சொல்கிறார். மக்களுக்கு வெளிச்சம் தந்த ஆட்சியாக அ.தி.மு.க., இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து