நேற்று அடிதடி... இன்று வாக்குவாதம்: களேபரமாகும் கோவை தேர்தல் களம்

கோவையில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நடத்திய செய்தியாளர் சந்திப்பு, வாக்குவாதத்தில் முடிந்திருக்கிறது. "செய்தியாளர்கள் நியாயமாக நடந்திருந்தால் நாடு எப்போதோ முன்னேறியிருக்கும்" என, அண்ணாமலை ஆவேசத்தை வெளிப்படுத்தினார்.

கோவை ஆவராம்பாளையத்தில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரசாரம் செய்ததாக தி.மு.க., கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களை பா.ஜ., நிர்வாகிகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் கார்த்திக் கூறுகையில், "பா.ஜ வேட்பாளருடன் வந்த அடியாட்கள் சிலர், எங்கள் ஆட்களை பின்னால் இருந்து தாக்கியுள்ளனர். அவர்கள் யாரும் உள்ளூர் கிடையாது. வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரவுடிகளாக இருந்தனர்.

இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. பாஜ. வேட்பாளர் எப்படிப்பட்டவர் என்பதற்கு இதுவே சாட்சி. கோவையில் மதவெறியை தூண்டி வெற்றி பெற்றுவிடலாம் என பா.ஜ., நினைக்கிறது. சட்டத்தை மீறி செயல்படும் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

இதையடுத்து, தேர்தல் விதிகளை மீறியதாக அண்ணாமலை மீது பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க.,வின் புகார் குறித்து அண்ணாமலை கூறியதாவது:

இரவு 10 மணிக்கு மேல் மக்களை சந்திக்க வேட்பாளர்களுக்கு உரிமை இருக்கிறது. 10 மணிக்கு மேல் மைக்கில் பிரசாரத்தில் தான் ஈடுபடகூடாது என தேர்தல் கமிஷனின் விதியில் உள்ளது. மைக்கை வைத்து நான் பிரசாரம் செய்யும் வீடியோ இருந்தால் காண்பிக்க சொல்லுங்கள்.

கோவையில் தி.மு.க.,வுக்கு டெபாசிட் கிடைக்காது, மக்களின் எழுச்சி பா.ஜ.,வின் பக்கம் இருக்கிறது. தமிழகத்தில் வன்முறை செய்ய ஒரு கட்சி பிறந்திருக்கிறது என்றால் அது தி.மு.க., தான். அவ்வளவு பேர் இருந்தும் அவர்களால் வீடியோ எடுக்க முடியவில்லையா.

எங்கள் தொண்டர்கள் யாரையும் தாக்கவில்லை, ஆனால் அதன்பின் தி.மு.க., தொண்டர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க., டெபாசிட் இழக்கும் முதல் தொகுதியாக கோவை இருக்கும்.

தமிழகத்தில் எந்த வேட்பாளரும் 10 மணிக்கு மேல் பிரசாரத்தை செய்ய முடியாது. நான் சென்ற அந்த வழியும் போலீஸ் அனுமதித்தது தான். அப்போது கூட அந்த வழியில் நான் பிரசாரம் செய்யவில்லை மக்களுக்கு நன்றி மட்டுமே சொன்னேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திடீர் வாக்குவாதம்



செய்தியாளர் சந்திப்பின்போது, "ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து சட்டசபையில் எந்த கேள்வியும் கேட்டது போல தெரியவில்லை" என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு வானதி சீனிவாசன் கூறுகையில், "பலமுறை இதைப் பற்றி சட்டசபையில் பேசியிருக்கிறேன்" என்றார்.

இதையடுத்து, அண்ணாமலை பேசுகையில், "கேள்வியில் அறம் இருக்கிறதா என பார்த்துக் கேட்க வேண்டும். அண்ணாமலைக்கு ஒரு நியாயம்... தி.மு.க.,வுக்கு ஒரு நியாயம் என இருக்கக் கூடாது. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை தி.மு.க., அரசு குறைத்துள்ளதா. இதை அங்கு கேட்க வேண்டியது தானே" என்றார்.

இதற்குப் பதில் அளித்த நிருபர் ஒருவர், "கோவைக்கு கனிமொழி வரும்போது கேட்டிருக்கிறோம்" என்றார்.

இதற்குப் பதில் அளித்த அண்ணாமலை, "தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க., சொன்னதை செய்தார்களா. செய்தியாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தை மக்களே பார்க்கட்டும். நீங்கள் நியாயமானவர்களாக இருந்திருந்தால் நாடு எப்போதோ முன்னேறியிருக்கும்" என்றார்.


Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
14-ஏப்-2024 11:19 Report Abuse
Kasimani Baskaran தீம்கா இதுவரை ரெளடியிசத்தை தான் மட்டுமே குத்தகைக்கு எடுத்திருந்ததாக கற்பனை செய்து கொண்டு இருந்தது.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்