அ.தி.மு.க., வியூகத்தை கசியவிடும் 'கருப்பு ஆடு' :வலை விரித்து காத்திருக்கும் பழனிசாமி
சேலம் தொகுதியில், சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, இடைப்பாடி, ஓமலுார் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், சேலம் வடக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க., - மா.செ., ராஜேந்திரனும், மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக பா.ம.க., - மா.செ., அருளும் உள்ளனர்.
மற்ற நான்கு தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்களாக அ.தி.மு.க.,வினர் உள்ளனர். இதில், வடக்கு தொகுதியில் தி.மு.க., முன்னிலை பெற்றாலும், வீரபாண்டி, மேற்கு தொகுதிகளில் பா.ம.க., கணிசமான ஓட்டுகளை பிரிப்பதால், பிற கட்சிகள் சமநிலையை அடையும்.
அதே நேரத்தில், ஓமலுார், இடைப்பாடி, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளில், பா.ம.க., ஓட்டுகளை பிரித்தாலும், அ.தி.மு.க., தலா, 50,000 ஓட்டுகள் முன்னணி பெற்று விட்டாலே அ.தி.மு.க., வெற்றி பெற்று விடும். அந்த தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பொறுப்பாளர்களுக்கு, பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது மட்டுல்ல, சேலம் வரும் போதெல்லாம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களை முடுக்கி விடுகிறார் பழனிசாமி ஆனால், அவர் கூறும் ஆலோசனைகள் அனைத்தும் அடுத்த சில நிமிடங்களில் எதிர்தரப்பான தி.மு.க.,வுக்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது. தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வின் வியூகங்களை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப தங்கள் பணிகளை மாற்றி அமைத்து கொள்கின்றனர்.
தற்போதைய நிலையில், அ.தி.மு.க., வின் திட்டத்தை முறியடிக்க, இடைப்பாடி, ஓமலுார், சேலம் தெற்கு தொகுதியின் ஒன்றிய செயலர்கள், பேரூராட்சி செயலர்களை பொறுப்பு அமைச்சர் நேரு, அமைச்சர் வேலு ஆகியோர் தொடர்பு கொண்டு, பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே வாக்காளர்கள், நிர்வாகிகளை வளைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையறிந்து அப்செட்டான பழனிசாமி தரப்பு, 'கருப்பு ஆடு' யார் என்பதை கண்டுபிடிக்க வலை விரித்துள்ளது.
வாசகர் கருத்து