இது தொடக்கம் தான்... 2026 தான் இலக்கு: விஜய பிரபாகரன்
"2026ல் அ.தி.மு.க., -தே.மு.தி.க., ஆட்சி அமைய வேண்டும். மீண்டும் முதல்வராக பழனிசாமி உள்ளே செல்ல வேண்டும்" என, விருதுநகர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.
விருதுநகர் மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது:
விருதுநகரில் பிறந்து மதுரைக்குச் சென்று சென்னையில் தலைவராக விஜயகாந்த் மறைந்தார். எனக்கும் விருதுநகருக்கான பந்தம் முடிந்துவிடும் என நினைத்தேன். ஆனால், என்ன புண்ணியம் செய்தேன் எனத் தெரியவில்லை. விருதுநகரில் வேட்பாளராக நின்று கொண்டிருக்கிறேன்.
அ.தி.மு.க -தே.மு.தி.க., என்பது வெற்றிக் கூட்டணி. ஆளும் தி.மு.க., அரசு எத்தனையோ வாக்குறுதிகளைக் கூறியும் அவை எதையும் நிறைவேற்றவில்லை.
2026 சட்டசபை தேர்தல் தான் நமது இலக்கு. அதற்கான தொடக்கமாக 2024 லோக்சபா தேர்தல் அமையப் போகிறது. 2026ல் அ.தி.மு.க., -தே.மு.தி.க., ஆட்சி அமைய வேண்டும். மீண்டும் முதல்வராக பழனிசாமி உள்ளே செல்ல வேண்டும்.
உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நிறைவேற்றித் தந்து உங்கள் குரலாக ஒலிப்பேன். நான் வெற்றி பெற்றால் இதே தொகுதியில் வீடு எடுத்து தங்குவேன்.
என் அம்மாவிடம், 'தேர்தல் வெற்றிக்குப் பிறகு விருதுநகரில் மாதத்தில் 10 முதல் 15 நாள் தங்கி சேவை செய்வேன்' என்றேன். அதற்கு அவர் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு உங்களை நம்பி கட்சியின் பொதுச்செயலர் என்னை அனுப்பி வைத்தார். ஏதோ நான் வந்தேன்.. பேசினேன் என நினைக்க வேண்டாம். உங்களுக்காக சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்.
ஏப்ரல் 19 வரைக்கும் நீங்கள் என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன் 4க்குப் பிறகு உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து