Advertisement

தி.மு.க.,வில் இந்த 3 விஷயங்கள் முக்கியம்: வேலூரில் விளாசிய மோடி

"தமிழகத்தில் மணல் விற்பனையில் மட்டும் 4200 கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எந்தளவுக்கு கொள்ளையடித்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்" என, வேலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

வேலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:

உங்களிடத்தில் தமிழில் பேசாமல் இருப்பதற்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 2024ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை உங்களுக்குத் தெரிவித்துக் கெள்கிறேன். வரும் ஆண்டு நமக்கு வளர்ச்சி மிகுந்த ஆண்டாக அமையும்.

டில்லியில் இருந்து இங்குள்ள கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். உங்களின் அன்பு எனக்கு இருக்கிறது. தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு என்னுடைய முழுத் திறமையை பயன்படுத்துவேன்.

வேலூர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரம். துணிச்சலுக்குப் பேர் போன ஊர். இங்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஜலகண்டேஸ்வர சிவனையும் முருகப் பெருமானையும் வணங்குகிறேன்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வேலூர் மண்ணில் மாபெரும் புரட்சி நடந்தது. வேலூர் மண்ணில் மீண்டும் ஒரு வரலாற்றைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது.

'மீண்டும் மோடி அரசு' என ஒட்டுமொத்த தமிழகமும் கூறிக் கொண்டிருக்கிறது. 21ம் நூற்றாண்டில் இந்தியாவையும் தமிழகத்தையும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு நல்ல இந்தியாவுக்கான அடித்தளத்தை தயார் செய்து வைத்துள்ளது.

2014க்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பொருளாதாரத்தில் பலவீனமான நாடாக இந்தியா இருந்தது. மிகப் பெரிய முடிவுகளை எடுக்க முடியாத நாடாகவும் இங்கு நடந்த ஊழல்களைப் பற்றி மட்டுமே செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இந்திய பொருளாதாரம் எப்போது வீழ்ச்சியடையும் என்ற நிலையில் தான் இதற்கு முந்தைய அரசு இருந்தது. ஆனால், இன்று உலகின் வல்லரசாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. அதில் தமிழகத்தின் பங்கு பெரிய அளவில் இருப்பதில் மகிழ்ச்சி.

விண்வெளித்துறையில் தமிழகம் சாதித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அமைந்துள்ள ராணுவ பாதுகாப்பு உற்பத்தி மையங்களின் மூலம் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழர்களின் திறமையும் பெருமையும் இந்தியாவை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுகிறது. உதான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையப் பணிகள் விரைவில் நிறைவடையும். விமான நிலையம் வந்தால் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

சென்னை-பெங்களூரு தொழில் வர்த்தகம் என்பது வேலூர் வழியாக செல்கிறது. இது நவீனமயமான ஊராக மாறிக் கொண்டிருக்கிறது. 2014 முதல் இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாட்டுக்காக பல பணிகளை செய்துள்ளோம். பிளாட்பாரங்களின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த இந்தியாவை தமிழகம் வழிநடத்தக் கூடிய நேரம் இது. ஆனால், தி.மு.க., பழைய சிந்தனையில் இருந்து கொண்டிருக்கிறது. பழைய அரசியலை செய்து நம்மை சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். தி.மு.க., என்பது ஒருவரின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது.

தி.மு.க.,வின் குடும்ப அரசியல் காரணமாக தமிழக இளைஞர்களால் முன்னேற முடியவில்லை. அவர்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் 3 விஷயங்கள் முக்கியமானதாக இருக்கிறது. ஒன்று, மிகப் பெரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். அடுத்து, ஊழல் செய்திருக்க வேண்டும். மூன்றாவது, தமிழ்க் கலாசாரத்தை எதிர்க்க வேண்டும்.

இந்த மூன்றை வைத்துக் கொண்டு தமிழகத்தை தி.மு.க., பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. ஊழலுக்கான முதல் காப்பீட்டு உரிமையை தி.மு.க., வைத்திருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் மணல் விற்பனையில் மட்டும் 4200 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் எந்தளவுக்கு கொள்ளையடிக்கும் விளையாட்டு நடக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை அனுப்புகிறோம். அதை தி.மு.க., ஊழல் செய்து கபளீகரம் செய்கிறது. தமிழகத்தின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றை மட்டும் தி.மு.க., பாழ்படுத்தவில்லை. சிறிய குழந்தைகளைக் கூட அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

பள்ளிக்கூடங்கள் போதைப்பொருள் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் என்.சி.பி. போதைப்பொருள் கும்பல் தலைவன் ஒருவனை கைது செய்தது. அந்த நபர், எந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார் எனத் தெரியுமா.

தி.மு.க.,வின் இந்தப் பாவங்களுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள். தி.மு.க.,வின் முக்கிய அரசியல் குறிக்கோள், மக்களைப் பிரித்து வைக்க வேண்டும் என்பது தான். தமிழக மக்களை மொழியின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒன்று மட்டும் தி.மு.க.,வுக்கு தெரியும். தங்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழக மக்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ அன்று செல்லாக்காசாக ஆகிவிடுவோம் என்பது தெரியும்.

கடந்த 50 ஆண்டுகளில் தி.மு.க., என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறதோ, அதைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமம் என தமிழகத்தின் மகத்தான பண்பாட்டை நாடு அறிந்து கொண்டிருக்கிறது.

ஐ.நா., சபையில் தமிழில் பேச முயற்சி செய்தேன். உலகில் பழைமையான மொழி தமிழ் என்பதை உலகுக்கு சொல்லும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த முயற்சிகளுக்கு தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன தெரியுமா.

தமிழகத்தின் புனிதமான செங்கோலை பார்லிமென்டில் வைத்தபோது அதை தி.மு.க., புறக்கணித்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டார்கள். இதில், தி.மு.க.,வின் போலியான முகம் வெளிப்பட்டுள்ளது. இது யாரின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்பது மக்களுக்கு தெரியும்,

இதைச் சொல்லாமல் காங்கிரஸ் மவுனம் சாதிக்கிறது. அந்த தீவுக்கு செல்லும் இநதிய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். கச்சத்தீவை நாங்கள் தான் கொடுத்தோம் என்ற உண்மையை அவர்கள் சொல்வதில்லை. இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை நான் அழைத்து வந்தேன்.

தி.மு.க.,வும் காங்கிரசும் தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்கள். வேலூர் மீது எப்போதும் எனக்குத் தனி மரியாதை இருக்கிறது. இங்குள்ள தங்க பொற்கோயிலுக்கு வந்திருக்கிறேன். பெண் சக்தியை ஆராதிக்கும் மண்ணாக தமிழகம் இருக்கிறது. ஆனால், பெண் சக்தியை அழிப்பேன் என்று காங்கிரஸ் கட்சியின் இளவரசர் கூறியது உங்களுக்கு நினைவில் இருக்கும்.

'சனாதனத்தை ஒழிப்போம், ராமர் கோயிலை புறக்கணிப்போம்' என தி.மு.க., பேசிக் கொண்டிருக்கிறது. பெண்களை இழிவுபடுத்துவதில் தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் வேறுபாடுகள் இல்லை

ஜெயலலிதாவை எப்படியெல்லாம் மோசமாக பேசினார்கள், நடத்தினார்கள் என்பது நமக்கு தெரியும். ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தின் மானத்தைக் காப்பதற்கும் எதிர்காலத்தைக் காப்பதற்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

தேசிய ஜனநரயக கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தொடர்ந்து வேலை செய்வார்கள். இதை மோடியின் உத்தரவாதமாக கூறிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்