என்னை யாரும் மதிப்பதுமில்லை... பேசுவதுமில்லை: துரைமுருகன் புலம்பல்
வேலுார் தொகுதியில் மீண்டும் போட்டியிட, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்கு பலத்த எதிர்ப்புக்கிடையே வாய்ப்பு கிடைத்தது. துரைமுருகனால் கட்சியில் உருவாக்கப்பட்ட, ஆளாக்கப்பட்ட இரண்டு மாவட்டச் செயலர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கதிர் ஆனந்திற்கு ஆதரவாக பெயருக்காகவும், கடமைக்காகவும் செயல்படுகின்றனர்.
அதிருப்தி அடைந்த துரைமுருகன், மற்ற வேட்பாளர்களின் மேடையில் வார்த்தைகளை வரம்பு மீறி பேசி வருவதால், அவரை தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் அனுப்ப மேலிடம் விரும்பவில்லை. தன்னை பற்றியும், தன் மகன் பற்றியும், கட்சி தலைமையும் என்ன ஏது என கேட்காமல் இருப்பதால், துரைமுருகனுக்கு வருத்தம் மேலோங்கி நிற்கிறது.
சமீபத்தில் தன் சக அமைச்சர்கள் இருவரிடம் மனம் திறந்து பேசியுள்ளார் துரைமுருகன். அப்போது, அவரது உள்ளக்குமுறலை கொட்டியுள்ள தகவல்வெளியாகியுள்ளது.
கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
அண்ணாதுரையோடு பணியாற்றியவன்; எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டவன். கருணாநிதியுடன் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவன். இப்போது ஸ்டாலினுடன் பணியாற்றுகிறேன்.
விசாரணைக்கு அழைக்கலாம்
கட்சி செயல்பாடுகள் குறித்து, நீட்டுகிற பேப்பரில் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் கையெழுத்து போடுகிறேன். கருணாநிதியும், பொதுச்செயலராக இருந்த அன்பழகனும், வேட்பாளர்கள் தேர்வில் இருவரும் கலந்தாலோசித்து தான் முடிவெடுப்பர்.
பொதுச்செயலர் கையெழுத்து போட்ட பின், வேட்பாளர் பட்டியல் வெளிவரும். கட்சியின் நிகழ்ச்சிகள் அத்தனையும் வெளிவரும். அப்படியொரு கட்டுப்பாட்டில் இருந்த கட்சியில், இப்போது யார் வேட்பாளர்? எந்த தொகுதியில் தி.மு.க., போட்டியிடுகிறது என்பதுகூட, தொண்டனுக்கு தெரிகிற அளவுக்குக்கூட எனக்கு தெரிவதில்லை.
என்னை யாரும் கட்சியில் பொதுச்செயலராக மதிப்பதில்லை. அமைச்சர்களும் பேசுவது கிடையாது.
கட்சி நிர்வாகிகள் என்னோடு தொடர்பு கொள்வதில்லை. ஏன் முதல்வருடனும் எனக்கு தொடர்பில்லை. என் கையை கட்டி, காலை கட்டி தஞ்சாவூர் பொம்மையைப் போல உருட்டி விட்டுள்ளனர். வேறு வழியின்றி, அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ஆடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் என் நிலைமை.
என் மனக்குமுறலை ஸ்டாலினிடம் போய் சொல்லுங்கள். மணல் பிரச்னையை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. வரும் 25ல், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஐந்து கலெக்டர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது, என் மீதும், என் துறையின் மீதும் புகார்களை அடுக்கினால், கெஜ்ரிவால் போல என்னையும் விசாரணைக்கு அழைக்கலாம்.
என் மகனும் தேர்தலுக்கு முன் கைது செய்யப்படுவார் என, டில்லியில் உள்ள நண்பர்களிடம் கண்ணீர் மல்க கூறினேன். நான் சிறையில் இருந்தபோது தான் என் மகன் பிறந்தான்; அங்கு தான் அவரை பார்த்தேன். அதனால், சிறை ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல.
எனக்கு 80 வயதாகிவிட்ட நிலையில், சித்ரவதைக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை வருமா என, அஞ்சவில்லை; இருந்தாலும் கவலைப்படுகிறேன்.
என்னை எப்படியாவது பொதுச்செயலர் பதவியில் இருந்து எடுத்துவிட்டு, வேறு ஒருவரை நியமிக்க, ரகசிய வேலைகள் நடந்து வருவதும் தெரியும். அதனால், எப்படி ஆற்காடு வீராசாமியை பொருளாளர் பதவியில் இருந்து, வயது முதிர்வு காரணமாக எடுத்தனரோ, அதே பாணியில் என்னையும் பதவியில் இருந்து எடுப்பதற்கு சதி வலை பின்னப்படுகிறது.
வாழ முடியாது
இந்த தேர்தலில் 'ஒன்மேன் ஆர்மி'யாக ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இளைஞரணி அலுவலகமான அன்பகத்திலிருந்து, அவருடைய சுற்றுப்பயண அறிக்கைகள் தனியாக வந்து விடுகின்றன.
அ.தி.மு.க., சின்னாபின்னமாகி பல ரூபங்களில் பிரிந்து கிடக்கிறது. அதுபோல் தி.மு.க.,வுக்கு வந்து விடக்கூடாது என்பது தான் என் கவலை. ஹிந்தி படிக்காமல், தமிழகத்தின் எல்லை தாண்டி சென்றால் வாழ முடியாது.
பார்லிமென்டில் ஆங்கிலமும், ஹிந்தியும் பேசுகின்றனர். தமிழ் மட்டுமே தெரிந்தவர்களால் என்ன செய்து விட முடியும். நன்கு வாதாடி பேசுவதற்கு ஹிந்தியும் தெரிய வேண்டும்; ஆங்கிலமும் தெரிய வேண்டும் என்றேன். இதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், அதை குற்றமாகக் கருதுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசியதாக தெரிகிறது.
தி.மு.க.,வில் 60 சதவீதம் சுயநலவாதிகள்மேலும், துரைமுருகன் கூறியுள்ளதாவது:பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மற்ற மாநில முதல்வர்களை கைது செய்து, அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளை ஒடுக்குவது போன்ற நிலை தி.மு.க.,வுக்கும் வருமோ என்ற அச்சம் உள்ளது. அப்படி ஒரு நிலை வந்தால், இங்கே இருக்கிற சுயநலவாதிகள், 60 சதவீதம் பேர் அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்கள். அவர்கள் கொள்கைக்காக வரவில்லை; பதவிக்காக வந்தவர்கள். மீதம் 20 சதவீதம் வயதான தி.மு.க.,வினர். கட்சிக்கு சோதனை என்றால் சுயநலவாதிகள் ஓடி விடுவர். என்னை போல வயதானவர்கள் தான் கட்சியில் இருப்பர். அவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது. அதனால், பா.ஜ.,வுடன் நாம் அனுசரித்து போவது தான் புத்திசாலித்தனம். எம்.ஜி.ஆர்., கருணாநிதி மத்திய அரசுடன் சமரசமாக இருந்துள்ளனர். ஸ்டாலினும் அப்படி இருக்க வேண்டும். ஸ்டாலினுக்கு நான் விசுவாசமாக இருக்கிறேன்; அவருடைய மகனையும் தோளில் சுமக்கிறேன். மகனின் மகன் அரசியலுக்கு வந்தாலும், இன்னொரு தோளில் சுமப்பேன். என்னிடம் கலந்தாலோசிக்காமல் வேறு யாரையும் பொதுச்செயலராக கொண்டு வருவதாக இருந்தால், என்னிடத்தில் சொல்லி விடுங்கள்; நானே ராஜினாமா செய்து விடுகிறேன்.இவ்வாறு அவர் வேதனையுடன் பேசிய தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து