தெரிந்திருந்தால் தமிழிசையிடம் பேசியிருப்பேன்: கலாய்த்த துரைமுருகன்
"தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல் போனால் எங்களுடன் சட்டசபைக்கு வந்துவிட வேண்டும். என்ன வேண்டுமானாலும் பேசலாம். பார்லிமென்ட்டில் அப்படி கிடையாது" என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
தென் சென்னை தி.மு.க., வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பேசியதாவது:
தமிழிசை எனக்கு வேண்டியவர். நான், குமரி அனந்தன் எல்லாம் எம்.எல்.ஏ.,வாக இருக்கும்போது என் வீட்டுக்குப் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருப்பார். அவருக்கு அதிர்ஷ்டம். அதனால் பா.ஜ., தலைவராகி கவர்னராகிவிட்டார்.
இரண்டு மாநிலத்தில் கவர்னராக இருந்துவிட்டு தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார். தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிப் போய்விட்டது போல தெரிகிறது. இல்லையெனில், அவர் கவர்னர் பதவியை விட்டு வந்திருக்க மாட்டார்.
தென்சென்னையிலா அவர் போட்டி போடப் போகிறார். எனக்குத் தெரிந்திருந்தால் தமிழிசைக்கு போன் போட்டு சொல்லி இருப்பேன். தி.மு.க., வெற்றி பெறுவதற்காகவே பிறந்த தொகுதி, தென்சென்னை.
பேசத் தெரிந்தவர்கள் தான் பார்லிமென்ட்டுக்கு போக முடியும். இந்தி, ஆங்கிலம் என இரண்டும் தெரியாமல் சென்றால் கஷ்டம் தான். தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல் போனால் எங்களுடன் சட்டசபைக்கு வந்துவிட வேண்டும். என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
பார்லிமென்ட்டில் அப்படி கிடையாது. தமிழச்சி ஆங்கிலத்தில் புலமை பெற்று கல்லுாரி பேராசியராக இருந்தவர். இவரது பேச்சைக் கேட்டு, 'தி.மு.க.,வில் இப்படி ஒரு எம்.பி.,யா?' அனைவரும் அசந்து போனார்கள்.
இப்படிப்பட்டவர் தான் அங்கு செல்ல வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.,வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தரைமட்டமாக்கிவிடுவேன் என பிரதமர் கூறுகிறார். இது தான் ஜனநாயகமா?
இதே ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது, 'எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமில்லாமல் வாக்களிக்காதவர்களும் வாழ்த்தும் அளவுக்கு நடந்து கொள்வேன்' என்றார்.
காரணம் அவர் கருணாநிதியின் மகன். பிரதமர் பேசுவது சர்வாதிகாரம். யாரை வேண்டுமானாலும் தரைமட்டம் செய்துவிடலாம். ஆனால் ,தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது.
நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பதற்காக இண்டியா கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. ஒரு முறை ஜனநாயகத்தை தவறவிட்டால் 100 ஆண்டு காலம் சர்வாதிகாரம் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து