என்னை எதிர்த்து 6 பன்னீர்செல்வங்கள்: காரணம் சொன்ன ஓ.பி.எஸ்.,
"ஜெயலலிதா இருந்த போது பெரிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டணிக்காக வந்தனர். இப்போது மன்சூர் அலிகான் போன்றோரை நேர்கானல் எடுக்கும் அளவுக்கு அ.தி.மு.க., மாறிவிட்டது" என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
ராமநாதபுரம் தொகுதியில் வாக்கு சேகரித்தபோது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
நான் இந்தத் தேர்தலில் சுயேட்சையாக மனு தாக்கல் செய்ய காரணம் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னுடன் சேர்த்து 6 பன்னீர்செல்வங்கள் குழப்பத்தை ஏற்படுத்தவே போட்டியிடுகின்றனர். மற்ற பன்னீர்செல்வங்கள் யார் வாயிலாக போட்டியிட வந்தனர் என்பது உங்களுக்கு தெரியும்.
ஒரு சின்னத்தை இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கேட்கும் போது குலுக்கல் சீட்டு முறையில் தான் சின்னம் ஒதுக்குவார்கள். அப்படித் தான் எனக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது.
தமிழக அரசியலில் அசைக்க முடியாத இயக்கமாக அ.தி.மு.க.,வை மாற்றியவர்கள் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும். ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது.
ஜெயலலிதா இருந்தபோது பெரிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டணிக்காக வந்தனர். இப்போது மன்சூர் அலிகான் போன்றோரை நேர்காணல் எடுக்கின்றனர். அ.தி.மு.க., இப்படி ஆகிவிட்டதை பார்த்து நாங்கள் கண்ணீர் வடிக்கிறோம்.
சசிகலா தான் பழனிசாமியை முதல்வராக்கினார். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தொண்டர்களின் கட்சியை தொண்டர்களிடம் ஒப்படைக்கும் வரை நான் ஓயமாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து