பிரசாரத்துக்கு செல்ல தடை? கண்ணீர் விட்டு கதறும் துரைமுருகன்
வேலுார் லோக்சபா தொகுதியின் சிட்டிங் எம்.பி., கதிர் ஆனந்த், தி.மு.க.,வின் வேட்பாளராக நிற்கிறார். இவரை எதிர்த்து, புதிய நீதிக்கட்சித் தலைவரும் பா.ஜ., கூட்டணி வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் களம் காண்கிறார்.
கடந்த முறை, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், ஏ.சி., சண்முகம் தோல்வியுற்றார். இருந்தபோதும், தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்.
அதற்காக, கடந்த ஓராண்டாக தொகுதியிலேயே முகாமிட்டு மக்களை சந்தித்தார். இலவச கல்வி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தினார். மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என உறுதி செய்தபின், களத்துக்கு வந்து விட்டார்.
கண்ணீர், கதறல்
ஆனால், சிட்டிங் எம்.பி., கதிர் ஆனந்துக்கு, கட்சிக்குள்ளும் பொதுமக்களிடையிலும் நல்ல பெயர் இல்லை. தி.மு.க., பொதுச் செயலரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு தன் மகனின் செயல்பாடுகளே பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன.
கடந்த தேர்தலில், தி.மு.க., தரப்பில் ஓட்டுக்கு பணம் கொடுக்க ஏராளமான பணம் பதுக்கி வைத்துள்ளனர் என, சொந்தக் கட்சியை சேர்ந்தோரே, வருமான வரித் துறையினரிடம் போட்டு கொடுத்தனர். அதையடுத்து தேர்தல் நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்குப் பின் தேர்தல் நடத்தப்பட்டு, கடும் போராட்டத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
அதனால், இந்த தேர்தலிலும் சிக்கல்கள் வரலாம் என, துரைமுருகன் அச்சப்படுகிறார். சட்டசபை தொகுதிவாரியாக, செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் துரைமுருகன், 'தி.மு.க.,வில் உள்ளோர் கொள்கை பற்றுடையவர்கள்; கட்சியினரை எதற்கும் எங்கும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்' என வீர வசனம் பேசி வருகிறார்.
ஆனாலும், 'தேர்தலுக்கு முன்பாகவே என் மகனை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது' என, கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். போகும் இடங்களில் இதே போல உருக்கமாக பேசுவதால், கட்சியினர் அவரை அதிர்ச்சியுடன் எதிர் நோக்குகின்றனர்.
கட்சியினர் மத்தியில் தான் இப்படி பேசுகிறார் என்றாலும், பொது இடங்களில் தொடர்ச்சியாக இப்படி பேசுவது கட்சித் தலைமைக்கு பிடிக்கவில்லையாம். இதை ஒரு நெருக்கடியாக பார்ப்பதால், அவரை வேலுார் தொகுதி தவிர்த்து வேறு எங்கும் செல்ல வேண்டாம் என, உத்தரவிட்டுள்ளதாக கட்சியினர் சொல்கின்றனர்.
விரும்பவில்லை
இதனால், லோக்சபா தேர்தலுக்காக தி.மு.க., 21 இடங்களில் போட்டியிட்டாலும், பொதுச் செயலர் என்ற முறையில் துரைமுருகனால் பிரசாரத்துக்காக எங்கும் செல்லாமல் இருக்கிறார். அதற்கான காரணம் இது தான் என கட்சியினர் கூறுகின்றனர்.
வேலுார் மாவட்ட தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் கூட்டணிக்காக அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய வேண்டியவர் துரைமுருகன். ஆனால், தன் மகனுக்காக வேலுார் லோக்சபா தொகுதியிலேயே முடங்கிக் கிடக்கிறார்.
அதுமட்டுமல்ல, அவர் சமீப காலமாக பேசும் கிண்டல், கேலிப் பேச்சுக்கள் கூட்டணி கட்சியினரையே முகம் சுளிக்க வைத்திருக்கின்றன. அதனால், மற்ற தொகுதிகளுக்கு பிரசாரத்துக்கு அனுப்ப தலைமை விரும்பவில்லை. இதை அவரிடமே சொல்லிவிட்டதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர் தேர்வு குழுவில் கூட அவருக்கு கட்சித் தலைமை இம்முறை இடம் கொடுக்கவில்லை.
இருந்தாலும், அவர் மற்ற தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்ய செல்ல தலைமையிடம் முட்டி மோதுகிறார். தலைமை ஒப்புதல் அளித்தால் அவர் வெளியூர் பிரசாரத்துக்கு செல்வார். இல்லையென்றால், வேலுாரிலேயே தான் இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்காக நடந்த அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு துரைமுருகன் பேசும்போது, ''வாழ்வும், சாவும் என்னை ஒன்றும் செய்யாது. துரைமுருகன் இதில் கில்லாடி. தேர்தலில் நான் டாக்டரேட் வாங்கியவன். எனது, 26 வயதில் இருந்து தேர்தலை பார்த்திருக்கிறேன்,'' என்று பேசியுள்ளார்.
வாசகர் கருத்து