'சான்ஸை மிஸ் பண்ணிட்டோமோ' அ.தி.மு.க., 'மாஜி'க்கள் புலம்பல்
தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரம் செய்கிறார்; 'இந்த சமயத்தில் உங்களுடன் கூட்டணியில் இருந்திருந்தால், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி உறுதி; நல்ல வாய்ப்பை, 'மிஸ்' பண்ணிட்டோம்' என அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சில மாஜி அமைச்சர்கள், பா.ஜ.,வினரிடம் புலம்பி வரும் தகவல் வெளியாகிஉள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, திடீரென கடந்த ஆண்டு இறுதியில் அ.தி.மு.க., அறிவித்தது. 'அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால், இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்' என, பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு, உளவுத்துறை தகவல் அளித்தது.
மீண்டும், அ.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்க, பா.ஜ., மேலிட தலைவர்கள் குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலரும் தீவிரம் காட்டினர். ஆனால், அ.தி.மு.க., தலைமை கூட்டணியைநிராகரித்து விட்டது.
சூறாவளி பிரசாரம்
எனவே, தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., இடையில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
சமீபத்தில், அ.தி.மு.க.,வில் பலமுறை அமைச்சராக இருந்த மூத்த நிர்வாகி ஒருவர், தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்துள்ளார். அதே இடத்தில் பா.ஜ.,வின் முக்கிய நிர்வாகிகளும் பிரசாரம் செய்துள்ளனர்.
அப்போது, இரு தரப்பினரும் பரஸ்பரம் நலம் விசாரித்துள்ளனர்; தனியாகவும் பேசியுள்ளனர்.
அப்போது, அந்த மாஜி கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரதமர் மோடி இந்த அளவுக்கு தீவிர பிரசாரம் செய்வதை பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது. ஒரு வேட்பாளரின் வெற்றிக்காக, அவரின் தொகுதியில் அவருக்காக தீவிரமாக பணிபுரியும் தலைமை ஏஜென்டை போல், பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
நழுவ விட்ட வாய்ப்பு
மாவட்டச் செயலர்களை போல், மத்திய அமைச்சர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் பிரசாரம் செய்கின்றனர். சென்னையில் பிரதமரின், 'ரோடு ஷோ' நிகழ்ச்சி என்பது எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.
இதுபோல், எந்த பிரதமரும் தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வந்தது கிடையாது; நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோமோ என்றுஎண்ணத் தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்த தகவலை, பா.ஜ., நிர்வாகி, சக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பலரும், தங்களிடமும் இதேபோல், பல முன்னாள் அமைச்சர்களும், அ.தி.மு.க., நிர்வாகிகளும் கருத்து தெரிவித்து வருவதாக கூறியுள்ளனர்.
வாசகர் கருத்து