என்னை டார்கெட் செய்கிறார்கள்: ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் விளக்கம்
"நெல்லை தொகுதியில் தாமரைக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதால் தி.மு.க.,வினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்" என, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயில் வாயிலாக பணம் கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் சோதனை செய்தபோது, 3 கோடியே 98 லட்ச ரூபாய் சிக்கியுள்ளது.
சுமார் 6 பைகளில் இந்தப் பணம் நெல்லைக்குக் கொண்டு செல்லப்பட இருந்தது. இந்த விவகாரத்தில் பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். பின், அவர்களைக் கைது செய்தனர்.
இதையடுத்து, நயினாருக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள புளூ டயமன்ட் ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து, விருகம்பாக்கத்தில் வசிக்கும் நயினாரின் உறவினரான முருகன் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையில், 4.5 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணையும் துவங்கி உள்ளது.
இந்நிலையில், தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. தேர்தல் நேரத்தில் இதுபோன்று செய்துள்ளனர். எனக்கு வேண்டியவர்கள், தி.மு.க.,விலும் இருக்கிறார்கள். அனிதா ராதாகிருஷ்ணனும் எனக்கு வேண்டியவர் தான்.
எனக்கு வேண்டிய நபர்கள், தங்களின் தொழிலுக்காக எடுத்துச் சென்றிருக்கலாம். இந்த விவகாரத்தில் என்னை டார்கெட் செய்கிறார்கள். நெல்லை தொகுதியை பொறுத்தவரையில் தாமரைக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அதனால் பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க., மேற்கொண்டு வருகிறது. யாரோ ஒருவரின் பணத்தைப் பிடித்துள்ளனர். ஒரு தனிப்பட்ட நபர் எனக்கு நெருக்கடி கொடுப்பதற்கான ஆதாரம் இருந்தால் பேசலாம். அவர்கள் மறைமுகமாக செய்கிறார்கள். தேர்தலை திசை திருப்புவதற்கான தி.மு.க.,வின் வேலைகளில் இதுவும் ஒன்று.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து