டீ வாங்கிக் குடுக்க கூட காசு இல்லை: செல்வப்பெருந்தகை புலம்பல்
"'கடந்த 2 நாள்களுக்கு முன்பு 4 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுவே எதிர்க்கட்சிகளிடம் இருந்து எடுத்திருந்தால் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் வந்திருக்கும்" என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழக காங்கிரசின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
1952ல் இருந்து மக்களிடம் சொன்னதை காங்கிரஸ் செய்து வந்து. அப்படி மோடியால் எதையாவது சொல்ல முடியுமா. இது தொடர்பாக விவாதத்துக்கு வாருங்கள் என சவால் விடுகிறோம். ஆனால், மோடியும் அண்ணாமலையும் வாய் திறக்க மறுக்கிறார்கள்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு 4 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுவே எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகளின் வேட்பாளர்களிடம் இருந்து எடுத்திருந்தால் சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை வரிந்து கட்டிக் கொண்டு வந்திருக்கும்.
இந்த விவகாரத்தில் மோடியும் நிர்மலா சீதாராமனும் மௌனமாக இருப்பது ஏன். பா.ஜ., சேர்ந்தவர்கள் என்றால் வழக்கு கிடையாது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு 3 நாள்களாகியும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள். இது தான் பா.ஜ., ஆட்சி. இதற்கு மக்கள் விரைவில் விடை கொடுப்பார்கள்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோனியா காந்தியை துர்கா பாய் எனக்கூறி கையெடுத்து கும்பிட்டார். ஆனால், மோடி ஏன் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். 500 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்த நிதி நிறுவனம் குறித்து அமலாக்கத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
அவர் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனால் அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்கள் எல்லாம் பதறிப் போய் உள்ளனர். காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறவும் ஊழல் குறித்துப் பேசவும் பிரதமர் மோடிக்கு தகுதியுள்ளதா?
கோவையில் நோட்டாவுக்கும் மேலே ஓட்டுகளை வாங்க அண்ணாமலை முயற்சி எடுக்கட்டும். சம உரிமையையும் சமத்துவத்தையும் நேசிக்காத கட்சியாக பா.ஜ., உள்ளது. ஒரே நாடு ஒரே மொழி ஒரே அதிபர் என்பது தான் பா.ஜ.,வின் கொள்கை. அவர்களின் கொள்கையே பிரித்தாள்வது தான்.
இண்டியா கூட்டணியில் உள்ள வேட்பாளர்களிடம் பணம் இல்லை. பிரசாரத்தில் டீ வாங்கிக் கொடுக்க கூட பணம் இல்லை. தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ், வி.சி., இடதுசாரிகள், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதா. நாங்கள் தண்ணீர் குடித்துவிட்டுத் தான் தேர்தல் வேலை பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து