காத்திருந்து காத்திருந்து கடுப்பாகி போன 'மாஜி'க்கள்
திண்டுக்கல் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ., சார்பில் முகமது முபாரக் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பிரசாரம் மேற்கொள்ள வந்திருந்தார்.
நாகல் நகர் அருகே ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்திற்கு இரவு 8:30 மணிக்குள் பிரேமலதா வந்து விடுவார் என அறிவிக்கப்பட்டது. மாலை 6:00 மணி முதலே, கூட்டத்திற்காக பொதுமக்கள் ஏற்பாடு செய்து அழைத்து வரப்பட்டுஇருந்தனர்.
இரவு 8:30 மணிக்குஅ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வந்தனர். மேடையேறாமல் அவர்களும் கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நேரம் ஆக ஆக அனைவருமே பொறுமை இழந்து விட்டனர். முன்னாள் அமைச்சர் சீனிவாசனோ, 'எப்போதுப்பா அந்தம்மா வருவாங்க' என்ற அளவிற்கு புலம்ப ஆரம்பித்து விட்டார்.
இரவு 9:15 மணி ஆகும்போதே கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் கலைந்து கொண்டிருந்தனர். நிர்வாகிகள் நாலாபுறமும் நின்று அவர்களை சமானதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இறுதியாக, இரவு 9:50 மணிக்கு தான் பிரேமலதா பொதுக்கூட்ட மேடையருகே வந்தார்; 10 நிடத்தில் பேச்சை முடித்துக் கொண்டார். 10:00 மணி ஆகிவிட தேர்தல் பறக்கும் படை வாகனமும் வந்தது.
அதன்பின் பறக்கும் படை அனுமதியுடன் மாலை, வரவேற்பு மட்டும் நடந்தது.
இதையும், 5 நிமிடத்தில் முடித்துக் கொண்டனர். 10 நிமிடம் கூட இல்லாத பேச்சுக்காக நான்கு மணி நேரம் உட்கார வைத்து விட்டனரே என தொண்டர்களும், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்களும் புலம்பியபடியே கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து