திருநெல்வேலியில் 5 நாள் தொடர் சோதனை நிதி சிக்கலில் தி.மு.க.,வினர்
திருநெல்வேலி தொகுதி காங்., வேட்பாளர் ராபர்ட் புரூஸ், 'இந்த தேர்தலில் ஒரு பைசா செலவு செய்யாமல் ஜெயித்துக் காட்டுகிறேன்' என சபதம் எடுத்துக் கொண்டு தேர்தல் பணியாற்றி வருகிறாரோ என்ற சந்தேகம் கட்சியினரிடம் உள்ளது.
சீட்டு தந்ததோடு காங்கிரஸ் கட்சியையும் தி.மு.க., தான் துாக்கி சுமக்கிறது. ஒரு தி.மு.க., வேட்பாளர் போட்டி யிட்டால் எவ்வாறு தேர்தல் பணியாற்றுவரோ அதே வகையில் தி.மு.க.,வினர் மாநகராட்சியில் மூன்று வார்டுகளுக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமித்து களப்பணியாற்றி வருகின்றனர்.
செலவு செய்யும் தி.மு.க.,
தி.மு.க.,வினருக்கான முழு செலவுகளையும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்துக் கொள்கிறார்.
நாளை திருநெல்வேலியில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்கும் பொதுக்கூட்ட இடம் தேர்வு உள்ளிட்ட பணிகளையும் கூட, அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மாவட்டச் செயலர்களே மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில்தான் தி.மு.க. மாவட்டச் செயலர் ஆவுடையப்பன் அலுவலகத்தில், வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன் நடத்திய சோதனையில், 30 லட்சம் வரை பணத்தை கைப்பற்றினர்.
அங்கு கிடைத்த குறிப்புகள் அடிப்படையில் கான்ட்ராக்ட் பணிகளை மேற்கொள்ளும் ஆர்.எஸ். முருகன் அலுவலகத்தில், கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டனர். இதனால் தி.மு.க.,வினர் ஆடிப்போயுள்ளனர்.
குறிப்பாக தேர்தலுக்கு முன் வாக்காளர்களை நேரடியாக கவனிக்க முடியாமல் ஆகிவிடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
படபடப்பு
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட 4 கோடி பணத்தை எடுத்துச் சென்றோர், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் பணியாற்றியவர்கள் என புகார் எழுந்தது.
இதனால், மறுதினம் திருநெல்வேலியில் அவரது ஹோட்டலில் பணிபுரியும் நிர்வாகிகள், அவரது விசுவாசிகளின் வீடுகளில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு, லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்செய்தனர்.
தேர்தல் பறக்கும் படையினரால் பா.ஜ.,வினரும், மத்திய வருமான வரித்துறையினரால் தி.மு.க.,வினரும்படபடப்பில் உள்ளனர்.
வாசகர் கருத்து