தலைவர்கள் போன் ஒட்டு கேட்பு: உளவுத்துறை மீது அ.தி.மு.க., புகார்
'அ.தி.மு.க., தலைவர்களின் போன்களை ஒட்டு கேட்கும், உளவுப்பிரிவு ஐ.ஜி., செந்தில்வேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை, தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன், இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட, மொபைல்போன் ஒட்டு கேட்பு சாப்ட்வேரை பயன்படுத்தி, எதிர்க்கட்சி தலைவர்கள் போன் உரையாடல்களை பதிவு செய்வதாக, அரசு மற்றும் காவல் துறையில் உள்ளவர்களிடம் இருந்து, தகவல் கிடைத்துள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, எதிர்க்கட்சி தலைவர்களின் மொபைல் போன்களை ஒட்டு கேட்பதற்காக, இந்த சாப்ட்வேர், 40 கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., மூத்த தலைவர்கள், அவர்களின் உதவியாளர்கள், ஓட்டுனர்கள் ஆகியோரின் போன் உரையாடல்களை, மாநில உளவுத்துறை கண்காணித்து வருகிறது.
மாநில உளவுத்துறை, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கள் கட்சி மூத்த தலைவர்களின் போன் உரையாடல்களை, இடைமறித்து கேட்டு, அந்த தகவல்களை செந்தில்வேலன், முதல்வருக்கு தெரியப்படுத்துகிறார்.
எங்கள் தேர்தல் வியூகத்தை அறிந்து, தினசரி முதல்வருக்கு அறிக்கை அளிக்கிறார். இது சட்ட விரோதம். எனவே, ஐ.ஜி., செந்தில்வேலன் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, சுதந்திரமாக, நேர்மையாக தேர்தல் நடத்த,தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து