பழனிசாமியின் 'மதுரை பாசம்' அ.தி.மு.க.,வினர் கூறும் பின்னணி
மதுரையில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து ஏற்கனவே பிரசாரம், பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார் பழனிசாமி. தென் மாவட்டங்களில் வெற்றி தேடி தரும் தொகுதிகளில் மதுரை மீது அவருக்கு அளவுக்கு அதிகமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. காரணம், வேட்பாளர் சரவணன். பொருளாதார ரீதியாக தனது 'அனைத்து பலத்தையும்' காண்பித்து பிரசாரம் செய்வதுதான்.
அவருக்கு எதிராக களத்தில் உள்ள மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசனுக்கு தி.மு.க.,வில் போதிய ஒத்துழைப்பு இல்லை. வேட்பாளர் மட்டுமே பிரசாரத்தில் தீவிரம் காட்டுகிறார். மேலும் தேர்தல் செலவுக்கும் கூட்டணியான தி.மு.க.,வையே அக்கட்சி எதிர்பார்க்கிறது.
மற்றொரு முக்கிய வேட்பாளர் பா.ஜ.,வின் ராமஸ்ரீனிவாசன். இத்தேர்தலில் இவருக்கு ஓட்டு சதவீதம் மட்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில்தான், சேலத்தில் காய்கறி மார்க்கெட்டில் பழனிசாமி மேற்கொண்ட தேர்தல் பிரசாரம், நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல மதுரையிலும் செய்ய வேண்டும் என, வேட்பாளர் சரவணன், பழனிசாமியிடம் தெரிவித்தார்.
அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையாலும், மதுரையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்திலும், தேனி பிரசாரத்திற்கு செல்லும் வழியில், பழனிசாமி பிரசார திட்டத்தையே மாற்றி மதுரை காய்கறி மார்க்கெட்டுக்குள் நுழைந்து வியாபாரிகள், மக்களை சந்தித்தார்.
அ.தி.மு.க.,வினர் கூறுகையில், ''தி.மு.க., கூட்டணியில் வெங்கடேசனுக்கான ஒத்துழைப்பு குறைந்தால் அது அ.தி.மு.க.,வுக்குத்தான் பலம். பல இடங்களில் அ.தி.மு.க., வெற்றிக்கு வலுவான பிரசாரம் இல்லை என்ற விஷயமும் பழனிசாமி கவனத்திற்கு சென்றுள்ளது.
இதனால் நிர்வாகிகளை ஒருங்கிணைக்க சில 'கறார்' உத்தரவுகளை மதுரையில் சத்தமின்றி பிறப்பித்துள்ளார். அத்துடன் வேட்பாளர் வேண்டுகோளையும் ஏற்று மார்க்கெட்டுக்கும் 'விசிட்' அடித்துள்ளார். இதனால் வேட்பாளர் தரப்பில் குஷியில் உள்ளனர்'' என்றனர்.
வாசகர் கருத்து