தீயா வேலை பார்க்கணும் சீனிவாசா... மதுரையில் பா.ஜ.,வினர் எதிர்பார்ப்பு
மதுரை தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பேராசிரியர் சீனிவாசன், பிரசாரத்தில் சுணக்கம் காட்டுவதாக கட்சியினர் புலம்பி வருகின்றனர். அத்தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் சிட்டிங் எம்.பி.,யான மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசனும், அ.தி.மு.க.,வின் மருத்துவர் சரவணனும், இதனால் கடும் உற்சாகம் அடைந்து களத்தில் தங்களுடைய பணியை வேகப்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.
வல்லமை
இது குறித்து, மதுரை பா.ஜ.,வினர் கூறியதாவது:
பேராசிரியர் சீனிவாசன் கட்சியின் பொதுச் செயலராக இருப்பதோடு, பொது மேடைகள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் நிறைய கலந்து கொண்டு, பா.ஜ.,வுக்கு ஆதர வான கருத்துக்களை முன்வைத்து பேசுவதில் வல்லமை படைத்தவர். வெகு காலமாக தொடர்ச்சியாக இந்த பணிகளை மேற்கொண்டு வருவதால், அவர் மக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார்.
கட்சி நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்களிலும் கலந்து கொண்டதால், கட்சி தலைமையிடமும் இவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது.
இதை வைத்து கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலிலும், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், மதுரை மற்றும் விருதுநகர் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால், அன்றைய சூழலில் அவருக்கு தலைமையால் சீட் ஒதுக்க முடியாமல் போனது.
சோர்ந்து போகாமல், தொடர்ந்து கட்சி மற்றும் மக்கள் பணியாற்றிய சீனிவாசன், கடந்த சில ஆண்டுகளாக டில்லி தலைமையிடமும் வளர்த்துக் கொண்ட நட்பை வைத்து, இம்முறையும் இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கேட்டார்.
எல்லா தொகுதிகளையும் போல, பா.ஜ., தலைமை மேற்கொண்ட சர்வேக்களில் மதுரை தொகுதியில் சீனிவாசனுக்கு வாய்ப்பளித்தால், வெற்றி கிடைக்கும் என உறுதிப்பட சொல்லப்பட்டது. அதை வைத்து, இம்முறை மதுரை தொகுதியில் போட்டியிட சீனிவாசனுக்கு தலைமை வாய்ப்பளித்தது.
துவக்கத்தில் வெற்றி நமக்குத்தான் என்று சொல்லி, ஆர்வமாக களம் இறங்கிய சீனிவாசன், தீயாக பிரசாரம் செய்து வந்தார்.
கடந்த ஒரு வார காலமாக, அவருடைய பிரசாரப் பணியில் பெரிய தொய்வு ஏற்பட்டிருக்கிறது. ஆர்வம் குறைந்து சுணக்கமாக இருப்பதால், என்ன நடந்தது என புரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகின்றனர். ஆனால், கட்சியை கடந்து, சமூக ஆர்வலர்கள், மதுரை தொகுதியில் நடத்தப்பட்ட பல சர்வேக்களும், களம் சீனிவாசனுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்த பின்னரும், சுணக்கத்துக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
சோம்பல் முறித்து
இதனால் களத்தில் உற்சாகம் இழந்து காணப்பட்ட எதிர் தரப்பினர், தேர்தல் பிரசாரத்தில் திடீர் வேகம் காட்டி வருகின்றனர்.
இப்படித்தான், சிவகங்கையில் சிதம்பரம் குடும்பத்தை எதிர்த்து போட்டியிட சீட் வாங்கி வரும் எச்.ராஜா, முதலில் வேகம் காட்டி விட்டு பின் சுணக்கம் அடைந்து விடுவார். அதே போலவே, இப்போது மதுரையில் நடக்கிறது.
அவர் தன் சோம்பலை முறித்து, களத்தில் வேகம் காட்ட வேண்டும். வெற்றி இவ்வளவு அருகில் இருக்கும்போது, நழுவிப்போனால், வாய்ப்பு கொடுத்த கட்சி தலைமைக்கும் மரியாதை இல்லை; பா.ஜ.,வின் மீது வெறியாக நம்பிக்கை வைத்திருக்கும் இளைய வாக்காளர்களுக்கும் மரியாதை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தன்னார்வலர்கள் நடத்தும் சர்வேக்களின்படி, தற்போது, ராம சீனிவாசனுக்கு 30 சதவீதம் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. பிரசாரத்தில் இன்னும் முனைப்பாக செயல்பட்டால் இதுஅதிகரிக்கும் என, சர்வேஎடுப்பவர்கள் சொல்கின்றனர்.
வாசகர் கருத்து