துரோகம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுங்கள்: தேனியில் பழனிசாமி பேச்சு
"ஸ்டாலின் எந்த கூட்டத்திலும் விவசாயிகளைப் பற்றி வாய் திறப்பதில்லை. விவசாயிகளின் நலன் மீது அக்கறை இல்லாத ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே" என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசினார்.
தேனியில் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க.,வில் இருந்த இருவரில் ஒருவர் தி.மு.க.,வுக்கும் மற்றொருவர் குக்கரை துாக்கி கொண்டும் திரிகிறார். ஒருவர் எம்.ஜி.,ஆரால் விலக்கி வைக்கப்பட்ட தி.மு.க.,வுடன் சேர்ந்து அ.தி.மு.க.,வை எதிர்க்கிறார்.
சுயநலத்துக்காக கட்சி மாறி போனவர்களுக்கு மக்கள் தேர்தல் வாயிலாக தண்டனை கொடுப்பார்கள். அ.தி.மு.க.,மட்டும் தான் மக்களுக்காக குரல் கொடுக்கிறது.
'நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி பா.ஜ.,' என்ற தினகரன், இப்போது அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளார், பச்சோந்தி கூட சிறிது நேரம் கழித்து நிறம் மாறும். இவர்கள் அடிக்கடி மாறுவார்கள்.
14 வருடங்களாக மக்களையே பார்க்காத ஒருவருக்கு வாக்களித்து என்ன பலன் இருக்கிறது. தி.மு.க., வேட்பாளரும் குக்கர் சின்னத்தில் நிற்கும் வேட்பாளரும் டெபாசிட் கூட வாங்கக் கூடாது. துரோகம் செய்தவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணைக்காக அ.தி.மு.க., சட்டப் போராட்டம் நடத்தியது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் எந்த முயற்சியும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். 'இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்' என விளம்பரப்படுத்திக் கொள்கிறார். 'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்தைக் கிழித்து வைகுண்டம் போனானாம்' என்ற கதையாக இருக்கிறது. தமிழகத்தில் ஸ்டாலின் செல்வாக்கை இழந்துவிட்டார்.
நானும் ஒரு விவசாயி. ஒரு விவசாயி எப்படி கஷ்டப்படுவார் என்பது எனக்கு தெரியும். ஸ்டாலின் எந்த கூட்டத்திலும் விவசாயிகளைப் பற்றி வாய் திறப்பதில்லை. விவசாயிகளின் நலன் மீது அக்கறை இல்லாத ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.
அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாய உபகரணங்களுக்கு மானியம் ஆகியவை வழங்கப்பட்டன. 2000 அம்மா மினி கிளினிக் துவங்கியதையும் மூடிவிட்டனர். இப்படி பல திட்டங்களை அரசியலுக்காக முடக்கினார், ஸ்டாலின்.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 40 சதவீதம் அதிகரித்துவிட்டது, 'கொள்ளுக்கு எள்ளுக்கும்' வித்தியாசம் தெரியாதவராக ஸ்டாலின் இருக்கிறார். பச்சை பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது ஸ்டாலின் தான்.
ஆசியாவில் மிகப் பெரிய கால்நடை பூங்கா துவங்கி இருந்தும் செயல்பாட்டுக்கு கொண்டு வர தி.மு.க., முன்வரவில்லை. மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்னை வந்தால் அதற்கு துணை நிற்கும் ஒரே கட்சி, அ.தி.மு.க தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து