தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடர் பார்த்தவர் கைது : காரணம் என்ன?
கடலூர் பா.ம.க., வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்தவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு பா.ம.க,. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் பா.ம.க., சார்பில் போட்டியிடும் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தென்னம்பாக்கத்தில் உள்ள அழகுமுத்து அய்யனார் கோயிலுக்கு அவர் சென்றார். அப்போது அங்கு மரத்தடியில் அமர்ந்து ஒருவர் கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரிடம் தங்கர் பச்சான், 'இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா என கிளியிடம் கேட்டு சொல்லுங்கள்' என்றார். ஜோதிடரும் கிளியை வெளியில் வரவைத்து, ஓர் அட்டையை எடுக்கச் சொன்னார். அதில், அய்யனார் படம் இருந்துள்ளது. உடனே ஜோதிடர், 'அய்யனாரே ஆசி கொடுத்துவிட்டார். நீங்கள் வெற்றி பெறப் போவது உறுதி' எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, தங்கர் பச்சான் கிளி ஜோதிடம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், தென்னம்பாக்கத்தில் கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த இரு நபர்களை வனத்துறை கைது செய்துள்ளது.
அவர்களிடம் இருந்து 4 கிளிகளையும் மீட்டுள்ளனர். கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோதிடம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் லட்சக்கணக்கான மரங்களும் ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க., அரசு, ஓர் ஏழை கிளி ஜோதிடரை கைது செய்து வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த ஜோதிடரின் பிழைப்பில் மண் அள்ளிப் போட்டுள்ளனர். இதற்கு காரணமானவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து