பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை: குஷ்பு சொன்ன 2 காரணங்கள்
"லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை" எனக் கூறி பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் பா.ஜ., வேட்பாளர்களுக்காக நடிகை குஷ்பு தீவிர பிரசாரம் செய்து வந்த நிலையில், "உடல்நிலை காரணமாக பிரசாரம் செய்ய இயலாது" என தெரிவித்து ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்தக் கடிதத்தை நன்றியுடனும் சோகத்துடன் எழுதுகிறேன். நாம் நன்றாக இருக்கும் போது தான் சில பிரச்னைகள் வருகின்றன. 2019ல் டில்லியில் நடந்த விபத்தில் முதுகின் கீழ்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக இந்தக் காயம் என்னை சிரமப்படுத்துகிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் குணமடையாத சூழலில் இருக்கிறேன்.
'இப்படியொரு சூழலில் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டாம்' என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அர்ப்பணிப்பு உள்ள பா.ஜ., தொண்டராகவும் மோடியை பின்பற்றும் நபராகவும் மருத்துவர்களின் அறிவுரையை மீறி வலி, வேதனையுடன் முடிந்த அளவுக்கு பிரசாரம் செய்தேன்.
ஆனால், உடல்நிலை மோசமாகிவிட்டது. தேர்தல் பிரசாரம் என்பது நீண்டநேரம் அமர்ந்து இருப்பது, நீண்ட பயணங்களை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த 2 விஷயங்களையும் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாது.
மருத்துவர்களின் ஆலோசனையை மீறி செயல்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதால் தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் கட்சிக்கு பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால், எனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் முடிந்த அளவுக்கு பா.ஜ.,வின் கொள்கை, செயல் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வேன்.
உடல்நலம் பெற்று மீண்டும் திரும்புவேன். பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்பதைக் காண ஆவலுடன் இருக்கிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து