பிரசாரத்திற்கு பீட்டர், விஜிலா ஜூட்: வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தனி ரூட்
திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதில் இருந்தே கோஷ்டி பூசல்கள் துவங்கி விட்டன. சீட்டு கிடைக்காத முன்னாள் எம்.பி. ராமசுப்புவை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமித்து ஒதுக்கி விட்டது காங்.,மேலிடம்.
தேர்தல் செலவு நிதிக்காக தி.மு.க.,வை எதிர்பார்த்து இருப்பதால் காங்., மாவட்ட நிர்வாகிகளும் களப்பணிக்கு வராமல் ஒதுங்கி இருக்கின்றனர்.
சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதற்காக காங்கிரசை சேர்ந்த பீட்டர் அல்போன்சுக்கு சிறுபான்மை ஆணைய தலைவர் பதவியும் அ.தி.மு.க.,விலிருந்து தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் மேயர் விஜிலா சத்யானந்துக்கு கிறிஸ்துவ தேவாலய உபதேசியார் பணியாளர் நல வாரிய தலைவராகவும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவருமே துாத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் திருநெல்வேலி தொகுதி பக்கம் வருவதாக இல்லை.
காங்., வேட்பாளர் ராபர்ட் புரூஸ், சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். சி.எஸ்.ஐ., சொத்துக்கள் கையாண்டது தொடர்பாக, அவர் மீது எதிர் தரப்பினர் புகார் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
எனவே அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்களின் கருத்து வேறுபாட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என விஜிலா நினைப்பதாக கட்சியினர் கூறுகின்றனர்.
அதனால், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ், திருநெல்வேலி வந்து சி.எஸ்.ஐ., பிஷப் பர்னபாஸ் உள்ளிட்ட சிலரிடம், ராபர்ட் புரூசுக்கு ஆதரவாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதற்கும் முன்பாகவே ராபர்ட் புரூசுக்கு எதிராக சில முக்கிய கிறிஸ்தவ பிரமுகர்கள் பிரசாரத்தில் களமிறங்கி விட்டனர்.
காங்கிரசார் களத்தில் இல்லாததால் துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துாத்துக்குடி எம்.பி., கனிமொழி போன்றோர் திருநெல்வேலியில் கூடுதல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு, தான் சார்ந்த மதம் தொடர்பான அமைப்பினரின் எதிர்ப்பு என திருநெல்வேலியில் திக்குமுக்காடி வருகிறார் கன்னியாகுமரி மண்ணின் மைந்தர் ராபர்ட் புரூஸ்.
வாசகர் கருத்து