பிரதமர் வேட்பாளர் ராகுல்: திரைமறைவில் ஸ்டாலின் ஓ.கே.,
கூட்டணி தலைவர்களின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே, இந்த தேர்லில் ராகுலை பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கவில்லை. அதேநேரத்தில், 'ராகுல் வருக... புதிய இந்தியாவிற்கு விடியல் தருக' என பேசியதன் வாயிலாக, ராகுலை பிரதமராக்கும் காங்கிரஸ் கட்சியின் விருப்பத்திற்கு, ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் அறிவித்தார். அப்போது, தமிழகத்தில் தி.மு.க., வெற்றி பெற்ற போதிலும், கூட்டணி குழப்பத்தால், தேசிய அளவில் காங்கிரசுக்கு தோல்வி ஏற்பட்டது.
கடும் எதிர்ப்பு
எனவே, இந்த லோக்சபா தேர்தலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, 'இண்டியா' கூட்டணிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் கோவையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், எதிர்பார்த்தப்படி அவர் அறிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, 'ராகுலே வருக... புதிய இந்தியாவுக்கு விடியல் தருக' என குறிப்பிட்டார்.
அதற்கு காரணம், 2019ல் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, அவர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். இப்போது, கார்கே தான் தலைவர். இண்டியா கூட்டணியின் தலைமை கட்சி என்ற முறையில், அதன் தலைவரை தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதால், ஸ்டாலின் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
லோக்சபா தேர்தலின் ஹீரோவாக ராகுலை வெளிப்படையாக ஸ்டாலின் சொல்லவில்லை. ஆனால், 'தேர்தலுக்கான ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான்' என, ஸ்டாலின் பேசி விட்டார். அதோடு அவர் நிற்கவில்லை. பிரதமர் வேட்பாளராக ராகுல் பெயரை, நான் தான் பகிரங்கமாக சொல்ல முடியவில்லை.
வரவேற்கிறேன்
ஆனால், தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களிடம், மக்கள் யார் உங்கள் அணிக்கு வேட்பாளர் என்றால், தாராளமாக ராகுல் பெயரை சொல்லுங்கள் என, ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டி கூறியிருக்கிறார்.
அதை தான் தன் பேச்சிலும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, 'ராகுலே வருக... புதிய இந்தியாவிற்கு விடியல் தருக என, இந்தியாவின் தென்முனையான தமிழகத்தில் இருந்து வரவேற்கிறேன்' என்று பேசியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து