வாய்ப்பை நழுவ விடும் நாகை பா.ஜ., வேட்பாளர்
நாகை தொகுதி பா.ஜ., வேட்பாளராக, கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் வசிக்கும் ரமேஷ் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க., தொண்டர்களின் ஓட்டுகளும் இவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதால், வேட்பாளராககளமிறக்கப்பட்டார்.
நம்பிக்கையோடு களமிறங்கிய வேட்பாளருக்கு, சொந்த கட்சியினரே குழி பறிப்பதாக பா.ஜ.,வினர் புலம்புகின்றனர்.
ஓட்டுப்பதிவுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரத்திற்கு செல்லும்போது, கூட்டணி கட்சியினருக்கு தகவல் தெரிவித்து, தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும். ஆனால், வேட்பாளருடன் வலம் வரும் நிர்வாகிகள், பிரசார பயணம் குறித்து திட்டமிடல் இல்லாமலும், கூட்டணி கட்சியினருக்கு கூட தகவல் தெரிவிக்காமலும் சுற்றுகின்றனர்.
இதனால், கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு இல்லாமல், தனியாக வேட்பாளர் சுற்றி வருவதால், பல இடங்களில் அவரை வரவேற்ககூட ஆளில்லாத நிலையே உள்ளது. கணிசமான ஓட்டுகள் கிடைப்பதற்கான சாதகமான சூழல், சொந்த கட்சியினராலேயே நழுவிப்போகும் வாய்ப்புள்ளதாக பா.ஜ.,வினர் புலம்புகின்றனர்.
வாசகர் கருத்து