ஆதரவளித்த ஸ்டாலினுக்கு ஆப்படிப்பது எப்படி: திருமாவளவனை நெளிய வைத்த கமல் பிரசாரம்
தமிழகம் முழுதும் தி.மு.க., கூட்டணிக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் கமல். தி.மு.க., கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்தார் நடிகர் கமல்.
அப்போது அவர் பேசிய பேச்சு, அருகில் இருந்த திருமாவளவனை நெளிய வைத்து உள்ளது.
சிதம்பரத்தில் கமல் பேசியதாவது:
எந்த சித்தாந்தமும் மக்களுக்காகத் தான். தேசத்துக்குப்பாதுகாப்பின்மை என்று வரும்போது தோளோடு தோள் நின்று களம் காண வேண்டும். 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில் ஜனநாயகத்துக்குஅச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அறிஞர்கள் கவலை
இந்தமுறை இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால் ஜனநாயகமே இருக்காது என அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள்.
அவர்கள் அறிஞர்கள் என்பதால் கவலைப்படுகிறார்கள். நாங்கள் வீரர்கள் என்பதால் களம் கண்டே ஆக வேண்டும். இந்தமுறை நான் தியாகம் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அது தியாகம் அல்ல, வியூகம்.
என் எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். ஜாதியம் தான் என்னுடைய எதிரி. என் சினிமாக்களும் அப்படித் தான். சினிமாவுக்கு ஏன் ஜாதிப் பெயர் வைக்கிறீர்கள் என்று கேட்பீர்கள். குடியின் கொடுமையைப் பற்றி படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரமாக ஒரு குடிமகன் தான் இருப்பான்.
ஜாதி வெறியனை மையப்படுத்தி தான் கதையை சொல்ல முடியும். அது ஜாதியை உயர்த்திப் பிடிப்பது ஆகாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் வேண்டும் என்றால், அடிமை விலங்கோடு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.
தமிழக மீனவர்களை காப்பதற்கு மத்திய அரசு தவறிவிட்டது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் மீனவர்கள் கைதாவதும் படகுகள் கைப்பற்றப்படுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. 'இவர் செய்தது... அவர் செய்தது' என எங்களுக்கு யாரும் சரித்திரம் சொல்ல வேண்டாம்.
இலங்கையோடு பகையும் உறவும் மாறி மாறி இருந்து வந்துள்ளது. 'நீங்கள் என்ன செய்தீர்கள்?' என்று சொல்லுங்கள். விவசாயிகளின் துயரத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. டில்லியில் சென்று போராடினார்கள். ஆதார விலை அல்ல, ஆதரவு விலையை தருகிறோம் என்றார்கள். அதையாவது செய்தார்களா?
அரசு எதுவும் செய்யவில்லை என்று கோஷம் எழுப்பிய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, எதிரிகளுக்கு கொடுக்கும் மரியாதையைக் கொடுத்தார்கள்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். இங்குள்ள எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பொதுத்துறை சொத்துகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
சுட்ட பழம் வேணுமா?
தேர்தல் பத்திரம் என்ற பெயரில் சட்டத்தை வளைத்து அதிகாரப்பூர்வமாக பணத்தைப் பறிக்கும் வழியை ஏற்படுத்தினார்கள். மற்றவர்கள் எல்லாம் வாங்கவில்லையா என்றால் அவை எல்லாம் பொறுக்கிய பழங்கள்.
'சு-ட்ட பழம் வேணுமா?' என மரத்தில் அமர்ந்துகேட்கிறார்கள். எந்த முதலாளியாவது ஆதாயம் இல்லாமல் ஆற்றில் போடுவார்களா? அவர்கள் ஆதாயம் பெற்றவர்கள். அவர்களை வழிக்குக் கொண்டு வர வருமானவரித்துறை ரெய்டுகளை அனுப்புகிறார்கள்.
சில கம்பெனிகள் தங்களின் வருவாயைவிட அதிக பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அவை எல்லாம் கருப்பு பணம். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால் கோபப்படுகிறார்கள். அது ஒன்றிய அரசு அல்ல, மக்களோடு ஒன்றாத அரசு.
இவ்வாறு அவர் பேசினார்.
பேச்சினிடையே தேர்தல் பத்திரம் தொடர்பாக கமல் பேசியதைப் பார்த்ததும்,திருமாவளவன் நெளிந்தார்.
கூட்டத்துக்கு வந்த வி.சி.,க்கள் கூறியதாவது:
தேர்தல் பத்திரம் தொடர்பாக அனைத்து உண்மைகளையும் உடைத்து பேசினார் கமல். என்ன நெருடல் என்றால், சில கம்பெனிகள் தங்களின் வருவாயை விட அதிக பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அவை எல்லாம் கருப்பு பணம் என்றார்.
நெளிவும் தெளிவும்
அவர் குறிப்பிட்ட நிறுவனம் மார்ட்டினுடையது. அவரின் மருமகனும் வி.சி., துணைப் பொதுச் செயலருமான ஆதவ் அர்ஜூனா தான், வி.சி.,க்கள் பிரசாரத்தை ஒருங்கிணைப்பவர்.
அவர் தொடர்புடைய நிறுவனத்தை பற்றி நடிகர் கமல், திருமாவை வைத்துக் கொண்டே பேசியதுதான், அவரை நெளிய வைத்தது. நடிகர் கமல் பேசியது, முழுமையாக யாருக்கும் புரியாததால் பேச்சு முடியும் வரை நெளிந்த திருமா, இறுதியில் சற்று நிம்மதியுடன் தெளிந்து எழுந்து சென்றார்.
மொத்தத்தில், வாய்ப்பளித்த முதல்வர் ஸ்டாலினுக்கே ஆப்படிப்பது போல கமல் பேசி வருவது கொஞ்சம் கூட சரியில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து