Advertisement

கந்துவட்டிக்காரர் போல கணக்கு கேட்கலாமா: நிர்மலாவை சாடிய ஸ்டாலின்

"மோடி சொல்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால் ஆர்.டி.ஐ., மூலம் புரளி கிளப்பிவிட்டுள்ளனர். உ.பி.,யில் கச்சத்தீவு பற்றிப் பேசியதிலேயே மோடி குழப்பத்தில் இருப்பது தெரிந்துவிட்டது" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலையில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அண்ணாதுரை மற்றும் ஆரணி வேட்பாளர் தரணி வேந்தன் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியாவில் சமூக நீதியும் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பா.ஜ., வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பா,ஜ., நாட்டை ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும் என மக்கள் தயாராகிவிட்டனர்.

இதனை நன்கு உணர்ந்திருப்பது மோடி தான். அதனால் தான் பயத்தில் அவரது கூட்டணியாக இருக்கிற ஐ.டி..,யை ஏவி காங்கிரசின் கணக்குகளை முடக்குவது, அமலாக்கத்துறையை ஏவி ஆம் ஆத்மி கட்சியை அழிப்பது என செயல்படுகிறார்.

இப்போது நாட்டு மக்களை குழப்ப ஆர்.டி.ஐ.யையும் தன் கூட்டணியில் மோடி சேர்த்துள்ளார். மோடி சொல்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் எனத் தெரிந்துவிட்டதால் ஆர்.டி.ஐ., மூலம் புரளி கிளப்பிவிட்டுள்ளனர்.

மோடி குழப்பத்தில் இருப்பதை உ.பி., யில் வைத்து கச்சத்தீவு பற்றிப் பேசுவதில் இருந்தே தெரிந்துவிட்டது. மோடியின் இந்தக் குழப்பங்கள் ஜூன் 4ம் தேதி தெளிந்துவிடும்,

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை, காமெடி டைமாக மாற்றிவிட்டார். அதிலும் ஈ.டி., க்கும் எனக்கும் சம்மந்தமில்லை என அவர் கூறியதைக் கேட்டு அனைவரும் ஆடிப் போய்விட்டனர்.

ஜார்க்கண்ட் முதல்வர், டில்லி முதல்வர் கைது, காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் ஆகியவை குறித்தெல்லாம் மோடிக்கு தெரியாது என்று சொல்வதை நாங்கள் நம்பிட்டோம்.

நாளை உங்களுக்கும் குஜராத்துக்கும் சம்மந்தமில்லை என சொன்னால் கூட மக்கள் நம்பிவிடுவார்கள் என நினைக்க வேண்டாம். தமிழகம் இரண்டு இயற்கை பேரிடர்களை சந்தித்தபோது, கேட்ட நிதியை தரவில்லை. நிதி அமைச்சர் வந்து பார்த்துவிட்டு சென்ற பிறகும் நிதி வரவில்லை.

மக்களுக்கு உதவுவதை பிச்சை என நிர்மலா சீதாராமன் கொச்சைப்படுத்தினார். நேற்று அவர் பேட்டியில் 5000 கோடி தந்துவிட்டோம் என்கிறார். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கந்துவட்டிக்காரர் போல நிதி அமைச்சர் பேசுகிறார்.

அது உலக வங்கியிடம் இருந்து வாங்கிய பணம். அது எப்படி மத்திய அரசின் கணக்கில் வரும். எதற்கும் நிதி தராமல் மோடி போல நிதியமைச்சரும் வாயில் வடை சுடுகிறார்.

நாங்கள் தேசிய பேரிடர் நிதியில் இருந்து 37000 கோடி ரூபாயை கேட்டோம். செலவு செய்யாமல் இருக்கும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் கேட்கிறோம். ஆனால், வாழைப்பழ காமொடி போல அது தான் இது என நக்கலாக பேசுகிறார்.

கடந்த தேர்ததலில் கூறிய அனைத்து வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். காலை உணவுத்திட்டம், மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தோழியர் விடுதி. நான் முதல்வன் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இந்த திட்டங்களால் தமிழகத்தில் உள்ள குடும்பங்கள் பலன் அடைகின்றன. திராவிடம் என்ற சொல் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்கள் எங்களை மத விரோதி என சித்தரிக்க முயற்சி செய்கின்றனர்.

மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைப்பவர்களுக்குத் தான் நாங்கள் எதிரி. வேறு எந்த மதத்துக்கும் எதிரி கிடையாது. கோவில்களுக்கு குடமுழுக்கு, கோவில் குளங்கள் சீரமைப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.

மக்களைப் பண்படுத்த ஆன்மிகத்தைப் பயன்படுத்த வேண்டுமே தவிர பா.ஜ., போல பிளவுபடுத்த பயன்படுத்தக் கூடாது. திராவிட மாடல் என்பது இந்தியாவின் மாடலாக மாறி உள்ளது.

அ.தி.மு.க.,வுக்கு எதிரி யார்.. எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்பது தெரியாமல் ரகசிய கூட்டணிக்கு ஆதாயம் தேடித் தருவதற்காக பழனிசாமி களத்துக்கு வந்துள்ளார்.

தன்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரின் முதுகையும் குத்தியவர் பழனிசாமி. துரோகங்கள் நிறைந்தது தான் பழனிசாமியின் கதை.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்