Advertisement

தேர்தலுக்காக கச்சத்தீவை கையில் எடுத்ததா பா.ஜ., : நிர்மலா சீதாராமன் விளக்கம்

"கடந்த 50, 60 வருடங்களாக மத்திய அரசு மீது பழிபோடுவதே தி.மு.க.,வின் வாடிக்கையாக போய்விட்டது. பிரிவினை பேசக் கூடிய கட்சிகளோடு தேசியவாதம் பேசும் காங்கிரஸ் அடங்கிப் போய்விட்டது" என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

கச்சத்தீவு விவகாரம் குறித்து இப்போது ஏன் பேசலாம் எனக் கேட்கலாம். 50 வருடங்களாக உண்மைக்குப் புறம்பான பிரசாரம் நடந்து வருகிறது. பொறுப்பில்லாத பேச்சு நிறைய வருகிறது. தேர்தலுக்கும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை. நாட்டின் இறையாண்மை தான் முக்கியம்.

1974ல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. 'மீனவர்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை' என்கிறார் ஒருவர். அது, நமது பொருளாதா மண்டலத்துக்குள் வருகிறது. 74ல் கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்த அந்த 2 பேரும் அப்போதும் கூட்டணியில் இருந்தார்கள். இப்போதும் கூட்டணியில் இருக்கிறார்கள்.

ஒரு தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ், 67க்குப் பிறகு இன்று வரையில் தமிழகத்துக்குள் ஆட்சியமைக்க முடியாத அளவில் உள்ளது. மாநிலக் கட்சியின் துணையோடு தான் செயல்படுகிறார்கள். அவர்களின் ஓட்டும் 4 சதவீதமாக குறைந்துவிட்டது. இவர்கள் இருவரும், கச்சத்தீவை ஏன் கொடுத்தோம் என விளக்கம் கொடுக்கட்டும்.

கச்சத்தீவு குறித்து நேரு எழுதிய கடிதத்தில், 'அது ஒரு தொல்லை. சீக்கிரத்தில் கையைவிட்டுப் போனால் நிம்மதி' என்கிறார். அந்தக் கடிதத்தைக் கூட நாங்கள் காட்டினோம். 'அது சிறிய கல்பாறை' என இந்திரா காந்தி சொல்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.

50 வருடங்களாக ஒரே பொய்



தேர்தல் இல்லாவிட்டாலும் சொல்ல வேண்டிய விஷயம் இது. தமிழக மக்களுக்கு இது தெரிய வேண்டும். இது குறித்து, 1974ல் வெளிறயயுறவுத்துறை செயலர் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார். தமிழர்களுக்கு விரோதமாக காங்கிரஸ் எதைச் செய்தாலும் தி.மு.க., அமைதியாக இருந்தது.

ஜல்லிக்கட்டு என்பது ஒரு மிருகத்துக்கு கொடுக்கக் கூடிய வதை எனக் கூறியபோது, தி.மு.க., எதையும் சொல்லவில்லை. கச்சத்தீவு குறித்து 21 கடிதங்களை ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியிருக்கிறார். அவர்கள், 50 வருடங்களாக சொல்லக் கூடிய பொய்யை சரிசெய்யட்டும்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ., ஏன் சரிசெய்யவில்லை என்கிறீர்கள். நீதிமன்றத்தில் 2 மனுக்கள் நிலுவையில் இருக்கிறது. அவை விசாரணைக்கு வரும்போது பேசுகிறேன்.

மீனவர்களை காப்பாற்றிய மோடி



2014ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க., அங்கம் வகித்தபோது இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 5 பேரையும் 2016ல் மோடி மீட்டுக் கொண்டு வந்தார்.

அதன்பிறகு இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவரின் உடலை அவரின் பெற்றோர் வாங்க மறுத்தனர். அந்த மீனவரின் பெற்றோரிடம் பேசி உடலை அடக்கம் செய்ய வைத்தேன்.

2014ல் இருந்து இன்று வரையில் எத்தனையோ மீனவர்களை இந்திய அரசு கூட்டி வந்ததை சொல்ல முடியும். இது எங்கள் கடமை. இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்ய முதல்முறையாக மீன்வளத்துறை அமைச்சரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் இணைந்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரையில் இப்படிப்பட்ட குழு அமைக்கப்பட்டது கிடையாது.

தேர்தலில் எப்போது போட்டி?



தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.,வுக்கு பணம் வந்தது என்கிறார்கள். ஏன் தி.மு.க.,க்கு வரவில்லையா. 100 ரூபாய் அவர்களுக்கு வந்ததில் 90 ரூபாய் ஒரே ஒரு ஆளிடம் இருந்து வந்துள்ளது. அவருக்கும் இவர்களுக்கும் என்ன கொடுக்கல் வாங்கல்?

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது. பா.ஜ.,வில் அனைவரும் தொண்டர்கள் தான். என் கட்சி எப்போது முடிவெடுக்கிறதோ அப்போது தான் போட்டியிடுவேன். பணம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைவருக்கும் இங்கு போட்டியிட வாய்ப்பு உள்ளது.

பி.எம்.ஆவாஸ் யோஜனா திட்டத்தில் முதல்வரின் படத்தை பெரிதாக வைக்கின்றனர். ஒரு பயமோ கூச்சமோ அல்லது கேள்வி கேட்பார்களோ என்ற நடுக்கமோ இல்லாமல், இது எங்கள் திட்டம் என போர்டு வைத்தால் நாங்கள் கேள்வி கேட்கத்தான் செய்வோம்.

5000 கோடி எங்கே போனது?



மிக்ஜாம் புயல் வந்தபோதே, 900 கோடி ரூபாயை தமிழக அரசுக்குக் கொடுத்தோம். சென்னை நகரத்துக்கு வெள்ளத்தால் சேதம் வருவதால் வடிகால் வாய்க்கால்களை சரிசெய்ய 5000 கோடி ரூபாயை கொடுத்தோம். அந்தப் பணத்தை சரியாக பயன்படுத்தியிருந்தால் மிக்ஜாம் பயுலில் சென்னை அவதிப்பட்டிருக்குமா?

அந்த நிதியில், '90 சதவீதம் செலவழித்துவிட்டோம்' என்றார்கள். பிறகு, 'அமைச்சர் தெரியாமல் சொல்லிவிட்டார்' என்றார்கள். அந்தக் கணக்கை தமிழக மக்களுக்கு சொல்லட்டும். அதை சரியாக பயன்படுத்தியிருந்தால் சேதத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நாங்கள் கொடுத்த பணம் எங்கே போனது?

ஒரு பைசா கூட தரவில்லை என்ற பாஷையை சரியாக பயன்படுத்த வேண்டும். 5000 கோடி எங்கே போனது. ஆண்டு முழுவதும் கொடுக்க வேண்டிய 900 கோடியை ஒரே முறையாக கொடுத்தோம். அதற்குப் பதில் சொல்லட்டும். தமிழகத்துக்கு வரவேண்டிய வெள்ள நிவாரண நிதி உயர்மட்டக் குழு கூட்டத்துக்குப் பின் வரத்தானே போகிறது?

அதேநேரம், 5000 கோடி கொடுத்ததற்கு தி.மு.க.,விடம் கணக்கு கேளுங்கள். எங்கு வடிகால் கட்டுகிறார்கள். எங்கே தண்ணீர் போகிறது. இந்தக் கேள்வியை தி.மு.க., அரசிடம் கேட்டீர்களா?

கடந்த 50, 60 வருடங்களாக மத்திய அரசு மீது பழிபோடுவதே தி.மு.க.,வின் வாடிக்கையாக போய்விட்டது. பிரிவினை பேசக் கூடிய கட்சிகளோடு தேசியவாதம் பேசும் காங்கிரஸ் அடங்கிப் போய்விட்டது.

காங்கிரசின் தவறு



அவர்கள், வருமான வரிக் கணக்கை சரியாக தாக்கல் செய்திருந்தால் பிரச்னையில்லை. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் தன்னுடைய கணக்கை சரியாக தாக்கல் செய்யவில்லை. அரசியல் கட்சிகளுக்கு வரி இல்லை. ஆனால், கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதைக் கூட காங்கிரஸ் கட்சி செய்யவில்லை.

சிலர், 9 முறை சம்மன் கொடுத்தாலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு போக மாட்டார்கள். அதேநேரம், மோடியை சி.பி.ஐ., விசாரணைக்கு அழைத்தபோது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். அவர் எந்தவித மறுப்பையும் தெரிவிக்காமல் விசாரணைக்கு ஆஜர் ஆனார். தண்ணீர் கூட குடிக்காமல் எட்டு மணிநேரம் பதில் அளித்தார்.

அருணாச்சல பிரதேசம் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரும் விளக்கம் கொடுத்திருக்கிறார். யார் பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை. அது இந்தியாவின் ஓர் அங்கம் தான்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்