இந்தியாவுக்கு ரோல்மாடல் திராவிட மாடல்: கமல் பேச்சு
"நமக்கு ஒரு ரூபாயில் 29 பைசாவும் இன்னொருவருக்கு 7 ரூபாயும் மற்றவருக்கு 3 ரூபாயும் கொடுக்கிறார்கள். நான் பொறமைப்படவில்லை. ஆனால் அங்கேயும் முன்னேற்றம் வந்துவிட்டதாக தெரியவில்லை" என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து கமல் பேசியதாவது:
குஜராத் மாடல் தான் சிறப்பு. திராவிட மாடல் ஒன்றுமில்லை என இனி பேச முடியாது. அதற்கு ஒரு பெரிய மலர்வளையத்தை ஸ்டாலின் வைத்துவிட்டார். அதுவும் தாமரை பூக்களால் வைத்துவிட்டார்.
நாயகன் படத்தில் ஒரு டயலாக் வரும். 'அடிச்சா தான் அடியில் இருந்து தப்ப முடியும்' என்று. ஜனநாயகத்தில் யாரையும் அடிக்க முடியாது. சித்தாந்தரீதியாக தான் அடிக்க முடியும். அதை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.
கல்வி, வறுமை, வேலைவாய்ப்பின்மை என மத்திய அரசை நோக்கி திருப்பி அடிக்கிறார். சர்வாதிகாரத்தையும் திருப்பியடிக்க துணிந்திருக்கிறார். அதனால் என்னைப் போன்ற ஆட்கள் இங்கு வந்து நிற்கிறோம். 'நீங்கள் அவரை விமர்சனம் செய்யவில்லையா?' என்கிறார்கள்.
விமர்சனம் செய்வது என் கடமை. உங்களின் கடமையும் தான். ஆனால் ஆபத்து என்று வரும்போது என் கையில் வாட்டர் பாட்டில் இருக்கிறது. வீடு பற்றி எரிந்தாலும் எறிய மாட்டேன் என்று சொல்பவன் நல்லவன் கிடையாது. 'எனக்கு முதலில் பரிவட்டம் கட்டு. தேரை இழுப்பேன்' என்று சொல்பவன் நான் கிடையாது.
ஜனநாயக தேரை இழுக்க வேண்டியது நம் கடமை. அதற்காகத் தான் நான் வந்திருக்கிறேன். 'உங்கள் வருமானம் போதுமானதாக இருக்கிறதா. பிள்ளைகளை படிக்க வைக்கும் அளவுக்கு பணம் இருக்கிறதா?' எனக் கேட்க விரும்புகிறேன். அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பத்தாது தான்.
ஆனால், ஒரே நபருக்கு ஒருவர் ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார். அதை இந்தத் தெருவில் கொஞ்சம் காட்டினால் ஒரு லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள். நாங்கள் 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசாவை மத்திய அரசு கொடுக்கிறது. அதில் இருந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
இந்தியா முழுக்க கட்டணமில்லா பேருந்து பயணத்தைக் கொடுத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். சிறு வியாபாரம் செய்யும் மகளிர் செல்வதற்கு உதவியாக இருக்கிறது. இந்தியா பின்பற்ற வேண்டியது திராவிட மாடலைத் தான்.
நமக்கு ஒரு ரூபாயில் 29 பைசாவும் இன்னொருவருக்கு 7 ரூபாயும் மற்றவருக்கு 3 ரூபாயும் கொடுக்கிறார்கள். நான் பொறமைப்படவில்லை. ஆனால் அங்கேயும் முன்னேற்றம் வந்துவிட்டதாக தெரியவில்லை. அவர்கள் இங்கு வேலைக்கு வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று கேட்கிறேன். இதற்கு முன் இல்லாதது போல ஏராளமான மீனவ மக்களை கைது செய்கின்றனர். படகுகளை ஏலத்துக்கு விடுகின்றனர். கேட்டால், நேரு செய்தார் என்கிறார்கள்.
தன்னுடைய சொத்துகளை எல்லாம் நாட்டுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு 16 வருஷம் நேரு சிறையில் இருந்தார். அரசின் துறைமுகத்தை இன்னொருவருக்கு கொடுக்கிறார்கள்.
சாதி, மதம் எனத் தொடர்ந்து தவறு செய்து வருகிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்ல எனக்குப் பயம் இல்லை. அதை உங்கள் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நான் கேட்டிருந்தால் தமிழச்சியின் சீட்டை எனக்குக் கொடுத்திருப்பார்கள். எந்த சீட்டில் நான் நிற்பேன் என எதிர்பார்த்தார்களோ அந்த சீட்டில் நிற்பவருக்காக நான் வந்திருக்கிறேன்.
'அடுத்து தேர்தல் நடக்குமா?' என அறிஞர்கள் பயப்படுகிறார்கள். நாம் செயல்வீரர்கள். நம் விரலால் சரித்திரத்தை மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து