செல்வகணபதி போன் பேச்சு பதற்றத்தில் பழனிசாமி
தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி, சொந்த ஊருக்குள்ளேயே இருந்து கொண்டு தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்வகணபதியைக் கண்டு நடுங்குவதாக, அ.தி.மு.க.,வினர் பரபரப்பாகப் பேசுகின்றனர்.
இதுகுறித்து, அக்கட்சி லோக்கல் நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய பழனிசாமி, தன் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கலாம் என நினைத்தார். காங்., வி.சி.,க்கள், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, அ.தி.மு.க., பக்கம் வருவர் என எதிர்பார்த்தார். அதற்காக பல நாட்கள், கூட்டணியை இறுதி செய்யாமல் பொறுமை காத்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. இதற்கிடையில் அ.தி.மு.க., பக்கம் வருவதாக உறுதியளித்திருந்த பா.ம.க.,வும் பா.ஜ., பக்கம் போய்விட்டது. இதனால், தே.மு.தி.க., மற்றும் சிறு கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொண்டு தேர்தல் களத்துக்கு சென்றார் பழனிசாமி. துவக்கத்தில், அ.தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது.
தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க அ.தி.மு.க.,வுக்கு புதுத்தெம்பு பிறந்தது. குறிப்பாக, பழனிசாமியின் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் திரண்டனர். அதேபோல, தமிழகம் முழுதும் இருந்து வரும் தகவல்கள் பழனிசாமிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன.
இதை கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் சொல்லி குதுாகலித்த பழனிசாமி, அதே வேகத்தில் அனைவரையும் தேர்தல் களத்தில் வேகப்படுத்தினார். வலுவான தி.மு.க., கூட்டணியையும்; புதிதாக முளைத்த பா.ஜ., கூட்டணியையும் தேர்தல் களத்தில் வீழ்த்திக் காட்டுவேன் என, கட்சியினர் மத்தியில் சூளுரைத்துப் பேசினார் பழனிசாமி.
ஆனால், சேலத்தில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதியின், தேர்தல் நுணுக்கங்கள், வியூகங்கள் குறித்து கேள்விபடத் துவங்கிய பழனிசாமி, சந்தோஷத்தை மறந்து அதிர்ச்சியடையத் துவங்கினார்.
காரணம், சேலத்தில் இருக்கும் அ.தி.மு.க.,வினரை பாசத்தோடு அவர் போன் வாயிலாக தொடர்பு கொண்டு பேசுவதுதான். ஒவ்வொரு நாளும் தேர்தல் பிரசாரம் முடிந்து வந்த கையோடு, இரவு நேரத்தில் தான் திரட்டி வைத்திருக்கும் அ.தி.மு.க., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பாசத்தைக் கொட்டி பேசும் செல்வகணபதி, பேச்சின் முடிவில் தன்னை வந்து சந்திக்குமாறு கூறுகிறார். இதையடுத்து, கட்சியின் நிர்வாகிகள் பலரும் அவரை ரகசியமாக சென்று சந்தித்துள்ளனர்.
அதேபோல, இரவு நேரங்களில் செல்வகணபதி, அ.தி.மு.க.,வில் இருக்கும் சிலருடைய வீடு தேடி சென்று பேசிச் செல்வதாகவும் பழனிசாமிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இது கட்சியினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு சேலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சப்படுகிறார்.
இதனால், கட்சி நிர்வாகிகளுக்கு அவர் கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கிறார். எக்காரணம் கொண்டும், யாரும் செல்வகணபதியிடம் பேசவோ, சந்திக்கவோ கூடாது. மீறி நடந்தால், கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என சொல்லி உள்ளார்.
அவ்வப்போது தொண்டர்களை சந்திக்கும் பழனிசாமி, பேச்சினிடையே செல்வகணபதி சில்மிஷங்கள் குறித்து பேசுகிறார்.
'தேர்தல் களத்தில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும். கடைசி வரை எதிரிக்கு இடம் கொடுக்காத வகையில் நம் பணி இருக்க வேண்டும்' என அறிவுரைகள் வழங்குகிறார்.
இதையடுத்து, கட்சித் தொண்டர்கள் செல்வகணபதி என வேறு நபர்கள் போன் செய்தாலும், எடுத்து பேசத் தயங்குகின்றனர்.
இவ்வாறு அந்த நிர்வாகிகள் கூறினர்.
வாசகர் கருத்து