வாடகைக்கு பூத் ஏஜென்டுகள் சுயேச்சைகளை வளைக்கும் பா.ஜ.,
திருவள்ளூர் தனி தொகுதியில், கூடுதல் பலத்திற்காக சுயேச்சை பூத் ஏஜென்டுகளை, வாடகைக்கு நியமிக்கும் நடவடிக்கையில் பா.ஜ., இறங்கிஉள்ளது.
திருவள்ளூர் தனி தொகுதியில், காங்., வேட்பாளராக சசிகாந்த் செந்தில், தே.மு.தி.க., வேட்பாளராக நல்லதம்பி, பா.ஜ., வேட்பாளராக பொன்.பாலகணபதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜெகதீஷ் சந்தர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்., - தே.மு.தி.க., வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பா.ஜ., வேட்பாளர் பாலகணபதி, இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதத்தை கைப்பற்ற கடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
தொழிற்சாலைகள், வர்த்தகம் நிறைந்த தொகுதி என்பதால், இங்கு டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகளவில் உள்ளன. மதுவால் பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதை அறிந்த பா.ஜ., வேட்பாளர், மதுவில்லாத திருவள்ளூர் என்ற முழக்கத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இது தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் பூத் ஏஜென்டுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இருப்பினும், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியை சமாளிப்பதற்கு கூடுதல் பலம் தேவைப்படுகிறது. எனவே, சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகளை வாடகைக்கு நியமிக்கும் நடவடிக்கையில், பா.ஜ., வேட்பாளர் இறங்கியுள்ளார்.
அதன்படி, பலரும் பா.ஜ.,விற்கு ஆதரவாக வளைக்கப்பட்டு உள்ளனர். இதனால், ஓட்டுச்சாவடிகளில், தி.மு.க., - அ.தி.மு.க., வினரின் வேலை எடுபடாது என்ற நம்பிக்கையில், திருவள்ளூர் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் உள்ளனர்.
வாசகர் கருத்து