Advertisement

பா.ஜ., தேர்தல் அறிக்கை நாட்டுக்கே வில்லன்: ஸ்டாலின்

"நாட்டில் நேரு துவங்கி மோடி வரை 14 பிரதமர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். மோடியை போல அமலாக்கத்துறை, ஐ.டி., சி.பி.ஐ., போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டியது வேறு யாருமில்லை" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

வடசென்னை தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:

'தமிழகத்துக்கு வேண்டாம் மோடி' என சொல்வதற்கு காரணம். அவர் இரவுகளில் கொண்டு வரப்படும் சட்டங்கள் தான். ஒருநாள் இரவு டி.வியில் தோன்றி பணமதிப்பிழப்பை அறிவித்தார். மக்களை ஏ.டி.எம்., வாசல்களில் மக்களை நிற்க வைத்தார். இதேபோல ஒரு இரவில் ஜி.எஸ்.டி., திட்டத்தைக் கொண்டு வந்தார்.

கொரோனா வந்தபோது, 'இரவில் விளக்குகளை ஏற்றுங்கள்.. கொரோனா போய்விடும்' என அறிவியல் மேதை போல பேசினார். இதனால் தான் பா.ஜ.,வும் மோடியும் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்கிறோம். இந்தியாவில் விடியலை ஏற்படுத்தவே 'இண்டியா' கூட்டணியை அமைத்துள்ளோம்.

மக்களைச் சந்தித்து மக்களுடன் இருந்து அவர்கள் பிரச்சனையை புரிந்து கொண்டு தி.மு.க.,வும் காங்கிரசும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. தி.மு.க., காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஹீரோ என்றால், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வில்லன்.

மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்த பொதுசிவில் சட்டத்தை அறிவித்துள்ளனர், பிளவுபடுத்துவது மட்டுமல்லாமல் ஏமாற்றும் தேர்தல் அறிக்கையாகவும் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. 2019 தேர்தல் அறிக்கையில், '1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்குவோம்' எனக் கூறியதையே இப்போதும் கூறியுள்ளனர். நாப்கினுக்கு ஜி.எஸ்.டி., போட்டது பா.ஜ., ஆட்சி. அந்த வரியை நீக்குவதற்கு தி.மு.க., எம்.பி.,க்கள் குரல் கொடுத்தனர்.

இன்றைக்கும் டில்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு எந்த வாக்குறுதியையும் இவர்கள் வழங்கவில்லை. 10 ஆண்டுகால ஆட்சியில் சாதனைகள் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை.

அடுத்து செய்யப் போவதற்கும் அவர்களிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. நாட்டில் நேரு துவங்கி மோடி வரை 14 பிரதமர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். மோடியை போல அமலாக்கத்துறை, ஐ.டி., சி.பி.ஐ., போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டியது வேறு யாருமில்லை.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாமல் முஸ்லிம் லீக் அறிக்கை என பிரிவினையை மோடி பேசுகிறார். உணவு என்பது தனி மனிதரின் விருப்பம். அடுத்தவர்கள் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை மோடியல்ல... யாரும் முடிவு செய்ய முடியாது.

மோடியை போல ஓட்டுக்காக மலிவான அரசியல் செய்யும் மனிதரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை. நாட்டில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்காமல் சுயவிளம்பரத்திற்கு மட்டும் தான் முன்னுரிமை தந்தார்.

நாட்டில் 83 சதவீதம் இளைஞர்கள் வேலையின்மையால் திண்டாடுகின்றனர். தேர்தலுக்காக மட்டும் தலையை காண்பிக்கும் மோடி தமிழகத்துக்கு ஏதாவது சிறப்பு திட்டங்களை செய்தாரா. மழை வெள்ளத்தில் தமிழக மக்கள் பாதிக்கும் போது நிதியாவது தந்தாரா?

தமிழகத்துக்கு 10 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் தந்ததாக பச்சை பொய் சொல்கின்றனர். மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி தந்தாக கூறியுள்ளனர். மாநில அரசு தான் அந்த சுமையை ஏற்றுள்ளது. இப்படி நிதி நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு பொய் சொல்கின்றனர்.

சாகர் மாலா திட்டத்துக்கு 2 லட்சம் கோடி தந்துள்ளோம் என்கின்றனர். அந்த பணிகள் எங்காவது நடந்து யாராவது பார்த்திருக்கிறார்களா. நீங்கள் பேசும் எத்தனை பொய்களை தான் எங்கள் காதுகள் தாங்கும். 10 ஆண்டு கால ஆட்சிக்கு ரிப்போர்ட் கார்டு தர முடியாத மோடி, எதை வைத்துக் கொண்டு ஓட்டு கேட்க வருகிறார்.

மெட்ரோ ரயில் திட்டம், பறக்கும் ரயில் திட்டம், கத்திப்பாரா மேம்பாலம் என பல திட்டங்களை தி.மு.க., கொண்டு வந்துள்ளது. ஓட்டலுக்கு சென்று சாப்பிட்ட பிறகு ரசீதை பார்த்தால் கூடுதல் தொகை இருக்கும். அது ஜி.எஸ்.டி., 'கார்ப்ரேட்டுகளுக்கு எவ்வளவோ தள்ளுபடி செய்கின்றனர். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லையே' என மக்கள் புலம்புகின்றனர்.

இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டால், 'ஓட்டலில் ஏன் சாப்பிட வேண்டும். வீட்டில் சாப்பிட வேண்டியது தானே?' என திமிராக சொல்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்