நெல்லையில் வெறும் 'கை'க்கு ஸ்டாலின் இன்று பிரசாரம்
திருநெல்வேலி காங்., வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்காததால் இன்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் பிரசார கூட்டம் நடக்கும் நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி காங்.,குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக தென்காசியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி., ராமசுப்பு, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் மகன் அசோக், களக்காடு பால்ராஜ், பரப்பாடி வழக்கறிஞர் காமராஜ் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஏற்கனவே, 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் குடும்பத்திற்கு மீண்டும் எம்.பி., தேர்தலில் வாய்ப்பு தர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கடைசி கட்டமாக காங்., மாவட்ட பொருளாளர் பால்ராஜுக்கு வாய்ப்பு தரப்படலாம் என என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பால்ராஜ் வேறு கட்சியிலிருந்து வந்தவர். ராகுல் பயணத்தின் போது கட்சி கொடிகளை கிழித்தவர் என குற்றம்சாட்டி நேற்று திருநெல்வேலி மாவட்ட காங்., அலுவலகம் முன் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மாலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதி காங்., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஆனால் திருநெல்வேலிக்கு இதுவரைக்கும் காங்., வேட்பாளர் அறிவிக்கப்படாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து