ராகுலுக்கு 'திட்டு' மோடிக்கு 'ஷொட்டு' பினராயி வியூகம்
தமிழகத்தில் கூட்டணியில் உள்ள காங்கிரசும், மா.கம்யூனிஸ்ட்டும் கேரளாவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. அங்கு 'இண்டியா' கூட்டணி இல்லை. இக்கூட்டணியின் முக்கிய தலைவரான ராகுலுக்கு எதிராக, வயநாட்டில் இந்திய கம்யூ., வேட்பாளர் ஆனிராஜா போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கேரள முதல்வரும், மா.கம்யூ., மூத்த தலைவருமான பினராயி விஜயன் பேசியதாவது:
டில்லி முதல்வர் கெஜ்ரிவால், இன்று திகார் சிறையில் இருக்க காங்கிரஸ் தான் காரணம். அந்த கட்சி அளித்த புகாரின் பேரில் தான் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இருந்த மணீஷ் சிசோடியா கைதானார். அவரை கைது செய்த போது, ஏன் முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது காங்கிரஸ். தற்போது கண்டனத்திற்கு எதிராக கூட்டம் நடத்துகின்றனர்.
'இண்டியா' கூட்டணி நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்று நினைத்திருந்தால், ராகுல் ஏன் வயநாட்டில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட வேண்டும். ஹிந்துத்துவா சக்திகளின் கோட்டையாக இருக்கும் வடமாநிலங்களில் போட்டியிட வேண்டியது தானே. அங்கு போட்டியிட்டு ராகுல் பலத்தை நிரூபித்திருக்க வேண்டும்.
ராகுல் நடத்திய யாத்திரையில்எங்கும், சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக பேசவில்லை. கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பது போன்று உறுதியாக நிற்க அவருக்கு திராணி இல்லை. வயநாட்டில் அவர் தோல்வியை பெறுவார்.
இவ்வாறு பேசினார்.
பினராயி விஜயன் பேச்சு குறித்து கேரளா மாநில காங்., நிர்வாகிகள் கூறுகையில், இவரது பேச்சு மோடிக்கு தான் உதவும். ராகுலை கடுமையாக எதிர்த்து பேசுபவர், மோடி பற்றி பேசும் போது மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார். அதற்கு காரணம் உள்ளது. அவரது மகள் வீணா விஜயன் மீது அமலாக்கத்துறையில் புகார் உள்ளது. கெஜ்ரிவால் நிலை தனக்கும் வந்து விடக்கூடாது என மோடியிடம் பவ்யம் காட்டுகிறார்' என்றனர்.
வாசகர் கருத்து