Advertisement

பா.ஜ.,வின் பி டீம் காங்கிரஸ்: பினராயி விஜயன் ஆவேசம்

"சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை" என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள கருத்து இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலில் வயநாடு தொகுதியில் காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., மாநில தலைவர் சுரேந்திரனும் இ.கம்யூ., வேட்பாளராக ஆனி ராஜாவும் களமிறங்குகின்றனர்.

இண்டியா கூட்டணியில் இருந்து ராகுலும் ஆனி ராஜாவும் போட்டியிடுவது துவக்கத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜாவின் மனைவி ஆவார்.

இதையடுத்து, 'வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, இ.கம்யூ., தேசிய செயலர் டி.ராஜா வலியுறுத்தி வந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: பா.ஜ.,வை எதிர்த்து போராடி வீழ்த்துவதே, இண்டியா கூட்டணியின் முதன்மை நோக்கமாக உள்ளது. நாட்டின் அரசியமைப்பு, கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை காப்பாற்றவும் மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவதும் கூட்டணியின் நோக்கம்.

கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே போட்டி உள்ளது. கடந்த முறையும் வயநாடு தொகுதியில் இடது முன்னணி போட்டியிட்டது.

வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. ஆனால், ராகுல்காந்தியை போன்ற ஒரு நபர், இடதுசாரி கூட்டணிக்கு எதிராக போட்டியிட வேண்டுமா. எனவே, வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு டி.ராஜா தெரிவித்திருந்தார்.

கடந்த முறை அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் தோற்ற ராகுல், வயநாடு தொகுதியில் பெருவாரியாக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை கணக்கில் வைத்து மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இ.கம்யூ., கட்சியின் கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை.

இந்நிலையில், ராகுலின் பிரசாரத்தில் கூட்டணிக் கட்சிகளின் கொடிகளைப் பயன்படுத்தாதது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து, மலப்புரத்தில் செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அதன் மதச்சார்பற்ற தன்மையில் இருந்து வெகுவாக விலகிவிட்டது. பா.ஜ.,வை சித்தாந்தரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கையாள்வதில் ஆர்வம் காட்டவில்லை.

பா.ஜ.,வை எதிர்ப்பதற்கான கருத்தியல் காங்கிரசிடம் இல்லை. அதிகாரப் போட்டியும் தேர்தல் அரசியலும் மட்டுமே காங்கிரசிடம் உள்ளது. பா.ஜ.,வின் பி டீமாக காங்கிரஸ் சீரழிகிறது. நாங்களோ செயல்திறனில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

கேரளாவில் காங்கிரசும் யு.டி.எப் கூட்டணியும் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வயநாட்டில் நடந்த ராகுலின் பிரசாரத்தில் முஸ்லிம் லீக்கின் கொடியை பயன்படுத்தவில்லை. இது காங்கிரசின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை பலவீனப்படுத்துவதாக உள்ளது. அதேபோல், மக்களைத் தவறாக வழிநடத்தவே கருத்துகணிப்புகள் உதவுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பாலக்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், "வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ராகுல், குடியுரிமை திருத்த மசோதா குறித்து தனது கருத்தை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி வரை வாய்திறக்கவில்லை. கருத்து சொல்லவிடமால் அவரை தடுத்தது யார்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்