வயநாட்டில் ராகுலுக்கு எதிராக பா.ஜ., புது அஸ்திரம்
காங்., - எம்.பி., ராகுல் போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் உள்ள நகராட்சி சுல்தான் பத்தேரி. தமிழக, கர்நாடக எல்லை அருகில் உள்ள முக்கிய நகரம். இங்கு, 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான மகா கணபதி கோவில் இருந்தது. அதனால் இந்த ஊரின் பழைய பெயர், கணபதி வட்டம். தற்போதும் கேரள அரசின் உள்ளாட்சித் துறை கெஜட்டில், 'கணபதி வட்டம்' என்ற பெயர் தான் உள்ளது.
ஹைதர் அலி, மலபார் பகுதியை ஆக்கிரமித்த போது, கணபதி கோவிலும், அருகில் இருந்த ஜைன மத கோவிலும் அழிக்கப்பட்டன. பின்பு, அவரது மகன் திப்பு சுல்தான் காலத்தில் இவ்வூரின் பல பகுதிகள், ஆயுதக் கிடங்காக மாற்றப்பட்டன. எனவே, இவ்வூரின் பெயர் ஆங்கிலேயர்களின் வரலாற்று குறிப்பில் Sultans Battery' (சுல்தான்ஸ் பேட்டரி) எனக் குறிப்பிடப்பட்டது. அது பின்னர் மருவி, 'சுல்தான் பத்தேரி' ஆனது.
வயநாட்டில் ராகுலுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள பா.ஜ., மாநில தலைவரும், தொகுதி வேட்பாளருமான சுரேந்திரன் கூறுகையில், ''ஆங்கிலேயர்கள் சூட்டிய, சுல்தான் பத்தேரி என்ற பெயரை பாரம்பரிய, வரலாற்று பெருமை மிக்க கணபதி வட்டம் என்று மாற்ற வேண்டும். நான் எம்.பி.,யானால் இதனை செயல்படுத்துவேன்,'' என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலிகுட்டி, ''இது கேரளா, இங்கு பா.ஜ., நினைப்பது நடக்காது,'' என்றார். காங்கிரசாரும், 'மதவாதத்தை துாண்டி ஓட்டுகளை பெற பா.ஜ., வேட்பாளர் முயற்சி செய்கிறார். சுல்தான் பத்தேரி மக்களிடையே பிரிவினையை விதைக்கிறார்' என கூறுகின்றனர்.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் சந்தீப் வாரியர் கூறுகையில், ''கேலிகட், கோழிக்கோடு ஆனது; கொயிலோன், கொல்லம் ஆனது. மைசூர், மைசூரு ஆனது. பாம்பே, மும்பை ஆனது. இவை நடக்கும் என்றால் ஏன் நம் பாரம்பரிய ஊரின் பெயரை மீட்டெடுக்க கூடாது. நாங்கள் வென்றால் நிச்சயம் நடக்கும்,'' என்றார்.
கடந்த முறை எளிதாக ராகுல் வென்ற வயநாட்டில், இந்த முறை பல்வேறு பிரச்னைகளை கிளப்பி, பா.ஜ., கடும் போட்டியை ஏற்படுத்திஉள்ளது.
வாசகர் கருத்து