தேர்தல் முடிவுகள்: ராகுலுக்கு ஆபத்து
'மோடி டீம்' அமைச்சர்களில் 'டெக்னாலஜி மினிஸ்டர்' என்று அறியப்படுபவர், மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவு, எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர். திருவனந்தபுரத்தில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
தொழிலதிபரான நீங்கள் அரசியலுக்கு வந்து பிரதமர் மோடியிடம் நெருக்கமானது எப்படி?
தொழிலதிபர் என்று சொல்வதை விட தொழில்முனைவோராக தான் இருந்தேன். தமிழகத்தின் முதல் மொபைல் போன் நெட்வொர்க் நிறுவனத்தை துவங்கினேன். பி.பி.எல்., செல்லுலார் நெட்வொர்க் நிறுவனத்தை, 1996ல் துவங்கி 2006ல் அந்த நிறுவனத்தை விற்று விட்டேன். பின் அரசியலில் நுழைந்தேன்.
கடந்த 18 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். கட்சியில் கீழ்மட்ட தொண்டனாக, பின்னணியில் பணிபுரிபவனாக செயல்பட்ட என்னை 2021ல் மத்திய இணை அமைச்சராக்கினார் பிரதமர் மோடி.
வரும் லோக்சபா தேர்தலில் திருவனந்தபுரத்தில் போட்டியிட வலியுறுத்தினார். ஏற்றுக்கொண்டு போட்டியிடுகிறேன்.
ராஜ்யசபா எம்.பி.,யான நீங்கள், தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறீர்கள். 'தேர்தல் அரசியல்' அனுபவம் எப்படி?
பல மாநிலங்களில் மற்றவர்களுக்கு தேர்தல் பணியாற்றி உள்ளேன். தேர்தல் நிர்வாகியாக செயல்பட்டுள்ளேன். நானே களத்துக்கு வந்து போட்டியிடுவது புதிய அனுபவமாக இருக்கிறது.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., வலுவாக உள்ளது; ஆனாலும், இதுவரை பா.ஜ.,வுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லையே?
நீங்கள் சொல்வது கடந்த காலம். ஆனால், பிரதமர் மோடியின் பத்தாண்டு கால சாதனைகளுக்கு கேரளாவிலும் மக்கள் அங்கீகாரம் உள்ளது. அதனால், இம்முறை கட்டாயம் பா.ஜ., வெற்றி பெறும்.
கேரளாவில் போட்டி எங்களுக்கும் காங்கிரசுக்கும் தான் என்று முதல்வர் பினராயி விஜயன் சொல்கிறாரே?
ஜோதிடர் போல பேசும் அவருடைய கருத்தை ஏற்க வேண்டியதில்லை. இந்த முறை அதை மாற்றிக் காட்டுவோம்.
கேரளாவிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று மத்திய அரசு மீது முதல்வர் பினராயி விஜயன் குறை கூறியுள்ளாரே?
மாநிலத்தில் மோசமான நிதி நிர்வாகம் நடக்கிறது. அதற்கான பொறுப்பை அவர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய அரசு, பிற மாநில வருவாயை எடுத்து கேரளாவுக்கு தர முடியுமா? அதற்கு மற்ற மாநிலங்கள் விடுமா? மாநிலத்தில் பெரும் நிதி பற்றாக்குறை இருக்கிறது என்றால், அதற்கு பினராயி அரசின் தவறான செயல்பாடுகளே காரணம்.
பிரதமரின் கனவு துறைகளான ஜல்சக்தி, எலக்ட்ரானிக்ஸ், தொழில் முனைவு போன்ற அனைத்திற்கும் ஒரு சேர நீங்கள் இணை அமைச்சராக்கப்பட்டது எப்படி?
என் செயல்பாடுகள் பிரதமருக்கு பிடித்து போனதால், இந்தத் துறைகளை நிர்வகிக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்துள்ளார். பிரதமர் வழிகாட்டுதலில் எல்லாமே நடக்கிறது. அரசியலை அரசியலாக பார்க்காமல் பொது சேவைக்கான கருவியாக பார்த்து செயல்படுகிறேன். அதனால், துறைகள் வாயிலாக நிறைய சாதிக்க முடிகிறது.
ஜல் சக்தி துறையின் அமைச்சராக இருந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?
தமிழகத்தில் கடந்த ஆட்சி போலவே தற்போதைய ஆட்சியிலும் ஒத்துழைப்பு இல்லை. இதனால் பணிகள் மெதுவாக நடக்கின்றன.
கேரளாவில் தலைநகர் திருவனந்த புரத்தில் பல லட்சம் வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை. மாநில அரசு பங்களிக்க வேண்டிய 30 சதவீத தொகையை அரசு தரவில்லை. இருந்தாலும், மாநில அரசின் நிதியை எதிர்பார்க்காமல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தருவதற்கான வாக்குறுதி கொடுத்திருக்கிறேன்.
உ.பி., குஜராத், தெலுங்கானா போன்ற மாநிலங்கள், 100 சதவீத குடிநீர் இணைப்பு பெற்றுள்ளது.
சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாம் நிலை மாநகரங்களும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பெற, தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரான உங்களிடம் திட்டம் ஏதும் உள்ளதா?
திட்டங்கள் உள்ளன. ஆனால், அதற்கு தமிழக அரசு சம்மதிக்கவில்லை. ஐ.டி., தொழில் நிறுவனங்களை, சென்னையில் இருந்து வெளியே எடுத்துச்செல்ல தமிழக அரசு விரும்பவில்லை. கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை. சென்னையிலே இருக்கத்தான் விரும்புகின்றனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீதான புகார்களில், அமலாக்கத்துறை மென்மையான போக்கை கடைபிடிக்கிறது என்று காங்கிரஸ் கூறுகிறதே?
அவர்கள் மீது வழக்கு வந்தால் அமலாக்கத்துறையை குறை கூறுவர். பிறர் மீது வழக்கு என்றால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பர். பினராயி விஜயன் மகள் மீதான வழக்கு விசாரணை ஆரம்பநிலையில் உள்ளது. பா.ஜ.,வும், கம்யூனிஸ்ட்டும் கூட்டணியில் உள்ளது என்று பரப்பி முஸ்லிம் ஓட்டுகளை மொத்தமாக தங்களுக்கே பெறுவதற்கு காங்கிரஸ் நாடகம் நடத்துகிறது.
தெலுங்கானாவில் இப்படி தான் செய்தனர். 'பி.ஆர்.எஸ்., - -பா.ஜ., கள்ள கூட்டணியாக உள்ளது. சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை கைது செய்யவில்லை' என்று பொய் பிரசாரம் செய்தனர். அதை வைத்து, முஸ்லிம் ஓட்டுகளை பெற்றனர். இப்போது கவிதா கைதானதும், பா.ஜ.,வை கண்டிக்கின்றனர்.
காங்., - எம்.பி., ராகுல் உங்கள் மாநில வயநாட்டில் போட்டியிடுகிறார். அவருக்கான வெற்றி வாய்ப்பு?
இம்முறை அவருக்கு கடினமாகத்தான் அமையும். வெளிநாடுகளுக்குச் சென்றதும் நம் தேர்தல் முறையை, நீதி நடைமுறையை விமர்சிக்கிறார். இந்தியா மோசம் என இளைஞர்களிடம் அவநம்பிக்கை ஏற்படுத்தும் அவருக்கு, தேர்தல் முடிவு ஆபத்தாக இருக்கும்.
ஐந்து தென்மாநிலங்களில் உள்ள மொத்தம் 130 லோக்சபா தொகுதிகளில், கடந்த முறை பா.ஜ.,வுக்கு 29 இடங்களே கிடைத்தன. இந்த முறை எப்படி இருக்கும்?
அறுபது இடங்கள் வரை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தேர்தலில் காங்., பெரும் பின்னடைவை சந்திக்கும்.
வாசகர் கருத்து