வயநாடு, இடுக்கியில் தி.மு.க., ஓட்டுகள் இந்த முறை ராகுலுக்கு இல்லை
தமிழகத்தில் கூட்டணி பங்காளிகளான காங்., - கம்யூ., கட்சிகள், கேரளாவில் 'எலியும் - பூனையுமாக' அரசியலில் களம் காண்கின்றன. அங்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி, ராகுல் போட்டியிடும் வயநாடு. அங்கு ராகுலை எதிர்த்து நிற்கிறார், இ. கம்யூ., கட்சியை சேர்ந்த ராஜாவின் மனைவி ஆனி ராஜா. இவர்களுடன் பா.ஜ., மாநில தலைவர் சுரேந்திரனும் களத்தில் உள்ளார்.
கடந்த, 2019 தேர்தலில், 4,31,770 ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றி பெற்றார். இதனால் 'சென்டிமென்ட்' ரீதியாக மீண்டும் அதே தொகுதியை ராகுல் தேர்வு செய்துள்ளார்.
அத்தொகுதியில் உள்ள தமிழர்களில் தி.மு.க., அனுதாபிகள் கணிசமாக உள்ளனர். அவர்கள் ராகுலை ஆதரிக்காமல் அவருக்கு எதிராக களம் இறங்கிய ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப் போவதாக, அம்மாவட்ட தி.மு.க., கமிட்டி அறிவித்துள்ளது.
அதேபோல் இடுக்கி தொகுதியில் காங்., சிட்டிங் எம்.பி.,யான டீன் குரியாக்கோஸ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மா.கம்யூ., சார்பில் ஜோயிஸ் ஜோர்ஜ் போட்டியிடுகிறார்.
அங்கும், 20,000த்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தி.மு.க., ஓட்டு வங்கி உள்ளது. ஆனால் அந்த தொகுதியிலும், கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிக்க உள்ளதாக அந்த மாவட்ட தி.மு.க., கமிட்டி பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இத்தேர்தல் ''இண்டியா கூட்டணியை ஆட்சியில் அமர வைக்கும் தேர்தல்'' என ஸ்டாலின் கூறி வரும் நிலையில் கேரளாவில் வயநாட்டிலும், இடுக்கியிலும் உள்ள தி.மு.க.,வினரின் ஓட்டுக்கள் காங்.,குக்கு கிடைக்காத சூழல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து