அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா காங்கிரசின் தெற்கு - வடக்கு வியூகம்
காங்கிரஸ் முதல் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளான அமேதியில் காங்., முன்னாள் தலைவர் ராகுலும், ரேபரேலியில் அவருடைய சகோதரி பிரியங்காவும் போட்டியிடுவது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வரும் ஏப்., 19க்குப் பின், இதற்கான அறிவிப்புவெளியாகும் என தெரிகிறது.
காங்கிரஸ் தலைமையிலான 'இண்டியா' கூட்டணி ஆட்சியைப் பிடிப்பதற்கான 272 எனும் தனிப் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தொட வேண்டும் என்றால், காங்கிரஸ் குறைந்தது 125 தொகுதிகளையேனும் வெல்ல வேண்டும்.
கிழக்கு மற்றும் மேற்கில் 50 தொகுதிகள்; வடக்கு, தெற்கில் தலா 50 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என காங்., திட்டமிட்டுள்ளது.
கிழக்கில் தேஜஸ்வி யாதவையும், மேற்கில் சரத்பவாரையும் காங்கிரஸ் பெரிதாக நம்பியுள்ளது. ஆனாலும், தெற்கிலும், வடக்கிலும் அது நேரடி கவனம் செலுத்துவது கட்டாயம் ஆகிறது.
கேரளாவில் 2019 லோக்சபா தேர்தல் போன்றே காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமான சூழல் உள்ள நிலையில்,தமிழகத்திலும் காங்கிரஸ் கூட்டணியே முன்னணியில் உள்ளது.
கர்நாடகா, தெலுங்கானாவில் காங்., ஆட்சியில் உள்ளது. எனவே, தன்னுடைய இலக்கைப் பெருமளவில் அடைய முடியும் என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது.
சென்ற முறை தெற்கில் காங்கிரஸ் கணிசமான இடங்களை வெல்ல, அதன் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டதும் ஒரு காரணியாக அமைந்தது.
அதேசமயம், 'வயநாட்டில் வென்றால் அமேதியை கைவிட்டுவிடுவார் ராகுல்' என்று பா.ஜ., பிரசாரம் செய்தது எடுபட்டது. உத்தர பிரதேசத்தின் அமேதியில் ராகுல் தோல்வியைத் தழுவவும், ஹிந்தி பிராந்தியங்களில் கட்சியின் பெரும் சரிவு தொடரவும் இதுவும் ஒரு காரணியாக அமைந்தது.
இதனால், இம்முறை அமேதிக்கு மீண்டும் திரும்ப ராகுல் உத்தேசித்திருந்தார். ஆனால், தெற்கில் முழு வெற்றி கிடைக்க வயநாட்டில் ராகுல் தொடர்வது முக்கியம் என்று தென் மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதேபோல, முதுமை காரணமாக சோனியா இம்முறை களத்திலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராகுலும் அமேதியை கைவிட்டுவிட்டால் நிலைமை மோசமாகும் என்று வடமாநிலங்களின் தலைவர்களும்எச்சரித்துள்ளனர்.
இந்த சூழலில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடப்பதைப் பயன்படுத்தி, இரு இடங்களிலும் போட்டியிடும் உத்தியை ராகுல் வகுத்திருக்கிறார். உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி இரு தொகுதிகளும் ஐந்தாம் கட்ட தேர்தல் பட்டியலிலேயே உள்ளன.
மே 20 அன்று ஓட்டுப்பதிவு நடக்கும் இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி மே 3. இதற்குள் தமிழகம், கேரளாவில் ஓட்டுப்பதிவு முடிந்து விடுகிறது. கர்நாடகாவின் பாதி தொகுதிகளில் தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து விடுகிறது. ஏனைய தென் மாநிலங்களிலும் மே 13ல் ஓட்டுப்பதிவு முடிந்துவிடுகிறது.
இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி உத்தரபிரதேச அறிவிப்பை ஒத்திப்போடுவது; முதலில் தென் மாநிலங்களிலும், அடுத்து வட மாநிலங்களிலும் முழு கவனம் செலுத்துவது என்ற முடிவை காங்கிரஸ் எடுத்துஉள்ளது.
உத்தர பிரதேசத்தில் மோடிக்கு இணையாக யோகியின் செல்வாக்கும் வளர்ந்துள்ளதால், ராகுல், பிரியங்கா இருவருமே உத்தர பிரதேசத்தில் இம்முறை போட்டியிடுவர் என்று காங்கிரஸ் தரப்பில் உறுதிப்படுத்துகின்றனர்.
வாசகர் கருத்து