பட்டாசு தொழில் வளர வழி வகை செய்யுங்கள்

விருதுநகர் லோக்சபா தொகுதியின் சிறப்பம்சமே, இந்தியாவிற்கு 95 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பகுதியாக விளங்குவதே. இத்தொகுதியில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் நேரடியாக மூன்று லட்சம், மறைமுகமாக ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

எந்தவித பிரச்னையும் இல்லாமல் பட்டாசு தொழில் நடந்து கொண்டிருந்த நிலையில், முதன்முறையாக 2015ல், பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என தன்னார்வலர்களால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2018ல் உச்ச நீதிமன்றம், பட்டாசு தயாரிப்பில் 'பேரியம் நைட்ரேட்' பயன்படுத்தக் கூடாது; அதிக ஒலி எழுப்பும் சரவெடி தயாரிக்கக் கூடாது; பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, இத்தீர்ப்பின்படியே இப்பகுதியில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது.

காலதாமதம்



இதற்காக பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்ய, மத்திய அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் - சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பின் கீழ் இயங்கி வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகத்தில் - நீரி; பதிவு செய்ய வேண்டும். அதன்படி இதுவரையில் 900த்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், பசுமை பட்டாசு உற்பத்தி செய்ய பதிவு செய்துள்ளன.

பின்னர், ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பசுமை பட்டாசை சோதனை செய்வதற்காக, நாக்பூரில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு பட்டாசு மாதிரிகளை மத்திய வெடிபொருள், பெட்ரோலியம் கட்டுப்பாட்டு துறை அதிகாரி கள் அனுப்பி வைப்பர். அங்கு ஆய்வு செய்த பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் பட்டாசு மாதிரிகளை அனுப்பி சான்றிதழ் பெறுவதற்கு அதிக காலம் ஆகிறது.

இதனால், தொடர்ச்சியாக பட்டாசு உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதை தவிப்பதற்காக, 'நீரி' சார்பில் பட்டாசு வேதியியல் பொருட்கள் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக, 2023 ஜனவரியில் சிவகாசி அருகே வெற்றிலையூரணியில், 15 கோடி ரூபாய் மதிப்பில் பட்டாசு வேதியியல் பொருட்கள் ஆய்வுக்கூடம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. 4.5 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி, 4.5 கோடி ரூபாய் சி.எஸ்.ஐ.ஆர்., - நீரி; நிதி, மீதமுள்ள 6 கோடி ரூபாய் பட்டாசு உற்பத்தியாளர்கள் வழங்கியுள்ளோம்.

ஆய்வகம் அமைக்கும் பணி நடந்து வருவதால், உடனடியாக பட்டாசு மாதிரிகளை சோதனை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, ஆமத்துார் ஏ.ஏ.ஏ., பொறியியல் கல்லுாரி வளாகத்தில், தற்காலிகமாக பட்டாசு வேதியியல் பொருட்கள் ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு இதுவரையிலும் 5,000த்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

30 சதவீத மாசு குறையும்



பட்டாசில் பயன்படும் வேதிப்பொருட்களின் தன்மை, வீரியம், தரம், பட்டாசின் ஒலி, ஒளி அளவை சோதனை செய்து கொள்ளலாம். தற்போது தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளில், முன்பு தயாரிக்கப்பட்ட பட்டாசு களில் உள்ள காற்று மாசை விட 30 சதவீதம் மாசு குறைவாகவே இருக்கும். மேலும் இந்த ஆய்வகம் அடுத்ததாக, பட்டாசு தொழில் வளர்ச்சிக்காக ஆராய்ச்சி மையமாகவும் இயங்க உள்ளது. இந்த பசுமை பட்டாசுகளை வாங்குவதற்கு வெளிநாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.

கொரோனா காலகட்டத்தில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், சுழற்சி முறையில் தான் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா சரியான நிலையில் பட்டாசு உற்பத்தி நடந்தாலும், மூலப்பொருட்கள் விலை உயர்வால் பட்டாசு விலையும் உயர்ந்து விற்பனை பாதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பதால் பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த முடியவில்லை; சரவெடி தயாரிக்க முடியவில்லை. இதனால், 80 சதவீதம் வெரைட்டி பட்டாசுகள், மக்கள் விரும்பும் பட்டாசுகளை கொடுக்கவும் முடியவில்லை.

ஏனெனில், பேரியம் நைட்ரேட் பயன்படுத்த முடியாததால், அனைவராலும் உபயோகப்படுத்தக்கூடிய மத்தாப்பு, சாட்டை, பூச்சட்டி, சக்கரம் மற்றும் சரவெடி போன்ற பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மக்கள் விரும்புகிற பட்டாசுகளை கொடுக்க முடியவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் ஆதங்கத்திலும் உள்ளனர்.

அனுமதி அவசியம்



வரும் காலத்தில் புதிய பசுமை பட்டாசு சரவெடி உற்பத்திக்கு அனுமதி வழங்கவும், குறைக்கப்பட்ட அளவு பேரியம் நைட்ரேட்டுடன் நுண் துகள்களை குறைக்கக்கூடிய வேதிப்பொருளை சேர்த்து பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதிக்கவும் மத்திய - மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று தர வேண்டும்.

வெளிநாடுகளுக்கு அதிகமான பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், நுாறாண்டு பாரம்பரியம் மிக்க பட்டாசு தொழில் வளர்ச்சி பெறும்.

- ப.கணேசன்தலைவர், தமிழ்நாடு கேப் வெட மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம்-டான்பாமா



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்