தமிழகத்தில் வெற்றி பெற என்ன வழி? பா.ஜ.,வினருக்கு பாடம் நடத்திய மோடி!
'நடுத்தர, உயர் நடுத்தர மக்களை, 80 சதவீதம் ஓட்டளிக்க வைத்து விட்டால் வெற்றி பெறலாம்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு, பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிகிறது.
வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு முன்னரே பல்லடம், கோவை, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி, சேலம் ஆகிய நகரங்களில், பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
ஆலோசனைகள்
அதைத் தொடர்ந்து, கடந்த 9, 10ம் தேதிகளில் சென்னை, வேலுார், கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் செய்தார்.
இதற்காக இரு நாட்கள் பயணமாக தமிழகம் வந்த மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகன், மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்ட தமிழக பா.ஜ., தலைவர்களிடம், தமிழக தேர்தல் கள நிலவரம் குறித்து பேசியுள்ளார்.
'தமிழகத்தில் தி.மு.க., அரசு இருப்பதால், அதிகாரிகள் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவும், பா.ஜ.,வுக்கு எதிராகவும் செயல்படுகின்றனர்.
'சில தொகுதிகளில் பா.ஜ.,வை வீழ்த்த தி.மு.க., -- அ.தி.மு.க., திரைமறைவில் இணைந்து செயல்படுகின்றனர்' என்று, பிரதமர் மோடியிடம் தெரிவித்து உள்ளனர்.
அப்போது, பல்வேறு ஆலோசனைகளை மோடி வழங்கியுள்ளார்.
'பா.ஜ.,வுக்கு யார் ஓட்டளிக்க தயாராக இருக்கின்றனரோ, அவர்களை முழுமையாக ஓட்டளிக்கச் செய்ய வேண்டும். நமக்கு தானே ஓட்டளிக்கப் போகின்றனர் என அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
கூடுதல் கவனம்
நடுத்தர, உயர் நடுத்தர மக்களை ஓட்டுச்சாவடிக்கு வரவழைத்து, 80 சதவீதம் ஓட்டளிக்கச் செய்து விட்டால் வெற்றி பெற முடியும்' என, மோடி அறிவுறுத்தியதாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
'பா.ஜ.,வுக்கு வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகளில், தி.மு.க., - அ.தி.மு.க., இரு தரப்பும் பல்வேறு யுக்திகளை கையாளும். எனவே, பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்றும், பிரதமர் மோடி அறிவுறுத்திய தாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து