மோடி வழிகாட்டுதலுடன் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி :ஜி.கே.வாசன் சிறப்பு பேட்டி

அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் கூட்டணி சேர கட்சிகளை தேடிக் கொண்டிருந்த நேரத்தில், முதல் ஆளாக வந்து பா.ஜ., அணியில் இடம் பிடித்தவர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க.,வை சேர்க்கும் அவரது முயற்சி பலன் அளிக்காத போதிலும், பா.ஜ., உறவை விரும்பி ஏற்றவர். அவர் அளித்த சிறப்பு பேட்டி:

அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி மீண்டும் மலருவதற்கு தாங்கள் துாதராகவும், இணைப்பு பாலமாகவும் செயல்பட்டீர்கள்; உங்கள் முயற்சி தோல்வியில் முடிந்ததற்கு என்ன காரணம் ?



இந்த லோக்சபா தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். எந்த கட்சிகளிடமும், கூட்டணி அமைப்பது பற்றி பேசுவதற்கு எனக்கு அதிகாரம் கிடையாது. ஏற்கனவே, கூட்டணியில் இருந்த ஒருமித்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில், அவர்களை நட்பு ரீதியாக சந்தித்து, தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசித்தோம். கூட்டணிக்கு வந்தாக வேண்டும்; வரக் கூடாது என, அவர்களிடம் சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லை.

பா.ஜ., கூட்டணியில் முதல் கட்சியாக தாங்கள் இடம் பெற்றது, அடுத்த அமையப்போகும் பா.ஜ., அமைச்சரவையில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானா?



இந்த வெற்றி அணியில் முதலில் நான் சேர்ந்தேன் என்றால், மற்ற கட்சிகளுக்கும் நம்பிக்கை தரும் வகையில் இருக்க வேண்டும் என, நினைத்தேன். எனக்கு எந்தவித நிர்ப்பந்தமோ, அழுத்தமோ, அவர்கள் தரவில்லை. எதையும் எதிர்பார்த்து கூட்டணி வைக்கவில்லை.

கொரோனா தொற்று காலத்திற்கு பின், நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமிழக மக்களுக்கும் நன்மை பயக்கும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் கூட்டணி அமைத்தோம். வருங்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் சேவை தேவை.

உலக தலைவர்களில் தலைசிறந்த ஆளுமைஉடைய தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். வரும் நாட்களில் இந்தியா வல்லரசு நாடாக மாறும். அதற்கு மீண்டும் பிரதமர் மோடி பதவி ஏற்க வேண்டும். இந்த முடிவுதான் அடித்தளமே தவிர, எதையும் எதிர்பார்த்து கூட்டணியில் இடம்பெறவில்லை.

அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். ஆனால், அக்கட்சிக்கு ஆதரவாக கூட்டணியில் இடம்பெறாமல், பா.ஜ., கூட்டணியில் இணைந்தது கட்சியினர் விருப்பமா அல்லது தங்களின் தனிப்பட்ட முடிவா?



தேர்தலில் கூட்டணி அமைத்தபின், தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும். அதில் மாநில கட்சியாக இருந்தாலும் சரி, தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, கூட்டணி கட்சிகளுக்குள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை ஏற்படும். அதற்கு பதிலாக, ராஜ்யசபா சீட் ஒதுக்கிக் கொடுப்பது வழக்கம்.

கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அந்த அடிப்படையில் ராஜ்யசபா சீட் தரப்பட்டது. அது கூட்டணி கட்சிகளின் உடன்பாடே தவிர; தனிப்பட்டவரின் உடன்பாடு இல்லை. அரசியல் புரிதல் இல்லாதவர்கள் தான் விதண்டாவாதமாக பேசுவர்.

கடந்த பத்தாண்டுகளாக, பிரதமர் மோடியின் சாதனைகளை பாராட்டி பேசி வருகிறீர்கள். தங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி தரவில்லையே என்ற வருத்தம் உண்டா?



நான் தனிப்பட்ட முறையில் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. மத்திய அமைச்சராக வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்கிறபோது வருத்தம் எப்படி வரும்?

தனிக்கட்சி துவங்கி, 30 ஆண்டுகள் ஆகப் போகின்றன. காங்கிரஸ் கட்சியிலும் சரி, த.மா.கா., விலும் சரி, தாங்கள் தேர்தல் அரசியலை சந்திப்பதற்கு தயக்கம் ஏன்?



முதல் முறையாக, த.மா.கா., சார்பிலும், இரண்டாவது முறையாக காங்கிரஸ் சார்பிலும் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டேன். கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம், அப்போது நான் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தது தான்.

கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், கட்சி நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் தரும் வகையில், தஞ்சாவூர் தொகுதியில் நடராஜனை போட்டியிட வைத்தேன். தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கிறேன். அதனால், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று. காமராஜரே வெற்றி பெற முடியாத காலம் இருந்தது. நாங்கள் எல்லாம் ஒரு துரும்பு தான். வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது.

வைகோவுக்கு பம்பரம் சின்னம், சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை என்பதால், அவர்களின் வெற்றிக்கு பின்னடைவு ஏற்படுமா? தங்களுக்குசைக்கிள் சின்னம் கிடைத்திருப்பதால், த.மா.கா.,வுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படுமா?



தேர்தல் கமிஷனில், சின்னத்தை பொறுத்தவரையில், சில கோட்பாடுகள் உள்ளன. அதற்கான சான்றிதழை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். அதை முறையாக தாக்கல் செய்யாத கட்சிகளுக்கு தான் சின்னம் கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

தேர்தல் கமிஷன் வேண்டியவர்களுக்கு சின்னம் கொடுக்கும்; வேண்டாதவர்களுக்கு கொடுக்காது என்றும், ஒருதலைபட்சமாக செயல்படுவதாக சொல்வதையும் ஏற்க முடியாது.

கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., மறைமுகமாக உதவியிருந்தால், சைக்கிள் சின்னம் கிடைத்திருக்குமே. மறைந்த ஞானதேசிகன் நடத்திய சட்டப் போராட்டத்தின் வாயிலாகவும், அவர் காட்டிய பாதையில் பயணம் செய்தும் வழக்கில் வெற்றி பெற்று, சைக்கிள் சின்னத்தை பெற்றுள்ளோம்.

ஸ்ரீபெரும்புதுார் தொகுதி த.மா.கா., வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, முதல் நாள் நடந்த பிரசாரத்தின் போது, சைக்கிள் சின்னத்திற்கு ஓட்டு கேட்பதற்கு பதிலாக, கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டது, பாரம்பரியமாக தாங்கள் காங்கிரஸ் குடும்பம் என்ற பாசமா அல்லது ஞாபக மறதியா?



அரசியலில் இதெல்லாம் சகஜமாகவும், வழக்கமாகவும் நடப்பது தான். நானும் தவறுதலாக தான் சொல்லி விட்டேன். வேண்டுமென்றே சின்னத்தை மாற்றிச் சொல்லவில்லை; 'டங் சிலிப்'பாகி விட்டது. தேர்தல் தேதி மாற்றியும், சுதந்திர தின விழாவை மாற்றியும் சில தலைவர்கள் பேசியுள்ளனர். எனவே, இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

மூப்பனார் தலைமையில் த.மா.கா., இயங்கியபோது, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கைகோர்த்த போதுகூட, பா.ஜ.,வை மூப்பனார் ஏற்கவில்லை. பா.ஜ., கூட்டணியை நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?



மூப்பனார் மறைந்து, 23 ஆண்டு களுக்கு மேலாகின்றன. நாட்டின் வாக்காளர்கள் எண்ணம் முழுதும் மாறிஉள்ளது. அன்று இருந்த காலம் வேறு; இன்றைய காலம் வேறு. அன்று இருந்த பா.ஜ.,வின் வலிமை வேறு; இன்றைய பா.ஜ., வலிமை வேறு.

வலிமையான பாரதத்திற்கு உத்தரவாதம் தந்து, படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது. இந்த பட்டியலில் தமிழகமும் இடம்பெறப் போகிறது. அதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்களின் மன ஓட்டம், தொண்டர்களின் எண்ண ஓட்டத்தை, த.மா.கா., வாயிலாக நான் பிரதிபலிக்கிறேன்.

தமிழக முதல்வர் வேட்பாளர் பதவி மீது, தங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்பதற்காகத் தான் மாநில கட்சியாக, த.மா.கா.,வை நடத்துகிறீர்களா?



நான் என்றைக்குமே முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை. ஆனால், கட்சி தொண்டர்கள் ஆசையை வெளிப்படுத்தி இருக்கலாம். அது அவர்களின் உரிமை; அதை மறுக்க முடியாது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமையும். காமராஜர் அரிச்சுவடியுடன் ஆட்சி அமைவதற்கு, அரசியல் சூழ்நிலை பிரகாசமாக இருக்கிறது. அந்த நல்ல முயற்சி நிறைவேறும். அதற்கான செயல்பாடு தான் த.மா.கா.,வின் நிலைப்பாடு.

தேர்தல் முடிவுக்குப் பின், ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையுமானால், மத்திய அமைச்சர் பதவி தரத் தயார்; காங்கிரசில் த.மா.கா.,வை இணைக்கச் சொன்னால், அதை ஏற்பீர்களா?



தி.மு.க., - அ.தி.மு.க., இணையுமா என்ன? இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைய வாய்ப்பு உண்டா? நாங்கள் தமிழ் மாநில காங்கிரஸ்; அவர்கள் அகில இந்திய தேசிய காங்கிரஸ்; இரு கட்சிகளுக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது.

தனிக்கட்சி துவக்கிய பின், நேரு குடும்பத்தை பற்றி நீங்கள் விமர்சித்தது இல்லை. தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் ராகுலை விமர்சித்து பிரசாரம் செய்வீர்களா?



'இண்டியா' கூட்டணி, முரண்பாடு களின் மொத்த உருவமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு, 25 எம்.பி.,க்கள் கூட கிடைக்க வாய்ப்பில்லை. பா.ஜ.,வுக்கு, 350 முதல் 400 எம்.பி.,க்கள் கிடைக்க உள்ளனர். எனவே, காங்கிரசை பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வின் தவறான செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, விமர்சிக்கத் தான் செய்கிறேன்.

உங்கள் சொந்த தொகுதியான மயிலாடுதுறை, தஞ்சாவூர் தொகுதிகள் வாங்காததற்கு காரணம், தங்களிடம் வேட்பாளர்கள் பஞ்சமா அல்லது விட்டுக் கொடுத்தீர்களா?



மயிலாடுதுறை தொகுதியை பா.ம.க., விரும்பிக் கேட்டதால் விட்டுக் கொடுத்தோம். தஞ்சாவூர் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டோம். அதனால், நாங்கள் கேட்ட மற்ற 3 தொகுதிகளும் கிடைத்தன.

பா.ஜ.,வுடன் நீங்கள் கூட்டணி அமைத்ததும், மூப்பனார் ஆன்மா உங்களை மன்னிக்காது என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதை எப்படி பார்க்கிறீர்கள்?



அகில இந்திய காங்கிரஸ் செயல்பாடுகளையும், தமிழக காங்கிரஸ் செயல்பாடுகளையும் விண்ணுலகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் காமராஜர் ஆவியே அவர்களை மன்னிக்காது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்