லோக்சபா தேர்தலால் வளரும் பொருளாதாரம்
கிட்டத்தட்ட 140 கோடிக்கும் மேற்பட்ட மக்களுடன், 'உலகின் நம்பர் 1' மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க தகுதியானவர்கள் எண்ணிக்கை 96.88 கோடி. இதில் மகளிர் 47 கோடி. முதல்முறையாக ஓட்டு செலுத்தப் போகும் 18 வயது வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடியை தொட இருக்கிறது.
நாடு முழுதும் 12 லட்சம் ஓட்டுச்சாவடிகளும், இரண்டு கோடி அரசு ஊழியர்களுமாக, தேசத்தின் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக, இன்னும் சில நாட்களில் நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது.
கடந்த 1952ல் நடைபெற்ற முதல் லோக்சபா தேர்தலில், 17 கோடி பேர் ஓட்டளித்தனர். 72 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை தற்போது, 97 கோடியாக வளர்ந்து நிற்கிறது.
ஆரம்ப கால தேர்தல்களில் மேள தாளங்கள் முழங்க கேட்டிருப்போம். சுவரொட்டிகள் பார்க்கலாம். சுவர்களில் சின்னம் வரைந்திருப்பர். ஊருக்கு மத்தியில் மேடை போட்டு, குழாய் ஒலிபெருக்கி கட்டி தலைவர்கள் பேசுவர்.
ஆனால், தேர்தல் பிரசாரம் இப்போது அப்படியா இருக்கிறது? மெகா டிஜிட்டல் திரைகள், முப்பரிமாண படங்கள், குளுகுளு கேரவன்கள், கன்டெய்னர் ஓய்வறைகள், வாடகை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பிரமாண்ட மேடைகள், சமூக வலைதள விளம்பரங்கள், பிளக்ஸ் பேனர்கள், கலை நிகழ்ச்சிகள், சிறிய, பெரிய பேரணிகள், அதற்கான ஆட்களை திரட்டுதல், பிரசார பயன்பாட்டிற்கான வாகன போக்குவரத்து, உணவு, தங்குமிடம், துண்டு பிரசுரம், சுவரொட்டி அச்சடித்தல் என்று பல்வேறு தொழில்கள் வேலைகள் மற்றும் சேவைகளுக்கு திடீர் வாய்ப்புகள் உருவாகின்றன.
செலவுகளின் உச்சம்
கிட்டத்தட்ட 60 நாட்கள், நாடு முழுதும் பல்வேறு துறையினருக்கும் தொழில் வாய்ப்புகள் கிடைத்து, பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பு மக்களுக்கும், சிறு, குறு தொழில்களுக்கும் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கின்றன.
உலகின் இரண்டாவது பெரிய செய்தித்தாள் சந்தையை கொண்டுள்ள இந்தியாவில், அச்சு ஊடக விளம்பர மார்க்கெட் தேர்தல் திருவிழாவில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கிட்டத்தட்ட 60 நாட்கள் நாடு முழுதும் நடைபெற இருக்கும் தேர்தல் பிரசார செலவுகளுக்காகவே, சுயேச்சைகள், சிறிய கட்சிகள் துவங்கி, ஆளுங்கட்சி வரைக்கும் தேர்தல் நன்கொடைகளை வாரி குவிக்கின்றன.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும், ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்ட வரவு -- செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்கின்றன.
கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு, 60,000 கோடி ரூபாய் செலவு செய்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த தொகையில் வேட்பாளர்கள் 40 சதவீதம், அரசியல் கட்சி கள் 35 சதவீதம், அரசு 15 சதவீதம், இதர வகையில் 10 சதவீதம் செலவு செய்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.
இவை, தலைமை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான செலவு கணக்கு. ஆனால், கணக்கில் வராமல், பல ஆயிரம் கோடிகளை வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுப்பதிலும், பிரமாண்ட பிரசார கூட்டங்கள் நடத்துவதிலும் அரசியல் கட்சிகள் செலவழித்துள்ளன.
விலைவாசி உயர்வு, கட்சிகள், வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு அடிப்படையில் கணக்கிட்டால், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், கட்சிகளின் செலவு, 1 லட்சம் கோடி ரூபாயை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரை நான்காவது காலாண்டில், 6 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது. அதே நேரத்தில் மார்ச் மாதத்திலேயே லோக்சபா தேர்தலுக்கு கட்சிகளின் செலவு துவங்கி விடும் என்பதால், பொருளாதார வளர்ச்சியில், 0.3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
லோக்சபா தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக, 95 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம் என்று, தலைமை தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. அரசியல் கட்சிகளின் வருமானம், 2.73 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
நடைபெற இருக்கும் ஜனநாயக திருவிழாவால், குறிப்பிட்ட நாட்களுக்கு மக்கள், வணிகர்களிடையே பண சுழற்சி இருக்கும். இந்த குறுகிய கால பொருளாதார வளர்ச்சியால், சாதாரண மக்களுக்கு பலன் கிடைக்கும். பொதுவாக, வசதி குறைவாக இருப்பவர் களிடம் புழங்கும் பணம், சந்தைக்கு உடனடியாக வந்துவிடும்.
இந்த நிலை எல்லா நாடுகளிலும் உள்ளது. தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களிடம் இருந்து கீழ்மட்ட தொண்டர்கள் வரை பணம் சென்று சேரும். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த, தேர்தல் கமிஷன் நீண்ட காலமாக முயற்சி எடுத்து வருகிறது. அதையும் மீறி கணக்குகளையும் தாண்டி, வெற்றி இலக்கு எட்ட, வேட்பாளர்களின் செலவுகள் உச்சம் தொடுகின்றன.
தனிநபருக்கு மிச்சம்
அடுத்த சில மாதங்களில், நாட்டின் தலைநகரில், தேசத்தை ஆளும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப்போகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், வரும் நாட்களில், தேர்தல் திருவிழாவை முன்னிட்டு, விளம்பரம், அச்சகத் துறை, போக்குவரத்து, விருந்தோம்பல், நிகழ்ச்சி ஏற்பாடுகள் போன்ற துறைகளில், தேர்தல் செலவுகள் அதிகமாக இருக்கும்.
இதனால் தனிநபர்களும், வியாபார நிறுவனங்களும் பலனடைவர். பாதுகாவலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், டிரைவர்கள் போன்ற தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாகும். பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளால், சாலை அமைத்தல் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாகும். பல ஆயிரம் பேர் கூடுவதால் விளம்பரங்கள், சமையல் உள்ளிட்ட சேவை துறை சார்ந்த வேலைகள் உருவாகும்.
அதேபோல வேட்பாளர்களின் வருமான வரி, ஜி.எஸ்.டி., வரி செலுத்துதல் காரணமாக நாட்டிற்கும் வரி வருவாய் அதிகரிக்கும்; கருப்பெல்லாம் வெள்ளையாகும். மொத்தத்தில் தேர்தல் திருவிழாவால் உண்டாகும் பொருளாதார சுழற்சியால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு பணப்புழக்கத்தில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களில் ஏராளமானோர் பலன் அடைவர்.
-ஜி.கார்த்திகேயன்ஆடிட்டர்
வாசகர் கருத்து