தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்துள்ளது!:ராஜேந்திர பாலாஜி சிறப்பு பேட்டி
ஜெயலலிதா அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அ.தி.மு.க., கட்சியின் அமைப்பு செயலராகவும், விருதுநகர் மாவட்ட செயலராகவும் உள்ளவர்; அதிரடியான பேச்சுக்கு சொந்தக்காரர். அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், இவரது பேச்சுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. கடந்த, 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் தன் அதிரடி பேச்சால் எதிர்க்கட்சிகளை கலங்கடித்தவர்.
தற்போது நடைபெறும் லோக்சபா தேர்தலில் பேச்சை குறைத்து, அமைதியின் உருவமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது பா.ஜ.,வினரே அதிர்ச்சி அடையும் வகையில், 'மோடி எங்கள் டாடி' என கூறினீர்கள். அதே நிலைப்பாடு இப்போதும் உண்டா?
மோடி எங்கள் டாடி என கூறியது என் தனிப்பட்ட கருத்து. தற்போது கட்சி தலைமையின் முடிவுப்படி கூட்டணியில் இல்லை. எனவே, நான் கட்சி தலைமையின் உத்தரவுபடி தான் செயல்படுவேன். இப்போது அந்த கருத்து இல்லை.
கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக அதிரடியாக பேசி பிரசாரத்தில் ஈடுபட்டீர்கள். ஆனால், தற்போது மிகவும் அமைதியாக பிரசாரம் செய்கிறீர்கள். என்ன காரணம்?
எல்லாம் அனுபவம் தான் காரணம். எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தவறுகளை சுட்டிக்காட்டத் தான் செய்கிறேன்.
பா.ஜ., கூட்டணியில் இருந்த போது சிறுபான்மையினரின் ஓட்டுகள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்ற கருத்து இருந்தது. தற்போது பா.ஜ., கூட்டணியில் இல்லாததால், சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?
அப்போது சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக கிடைக்காததற்கு, தி.மு.க.,வின் சதி தான் காரணம். அவர்கள் மதத்தை வைத்து பொய்யாக பிரசாரம் செய்தனர். ஆனாலும் அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. இந்த தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டு எங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
பட்டாசு தொழில் தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்னையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டாசு தொழிலாளர்கள், உரிமையாளர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்குமா?
ஆட்சியில் இருந்தபோது இங்குள்ள பட்டாசு தொழிலதிபர்களை அழைத்து அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்து நீதிமன்றத்தில் வாதாட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசிடமும் அவர்களை அழைத்துச் சென்று, பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவை, பட்டாசு உரிமையாளர்களுக்கு, தொழிலாளர்களுக்கு நன்கு தெரியும். எனவே, அவர்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பர்.
பொதுவாக எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டு அ.தி.மு.க.,விற்கும் அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டு தி.மு.க.,விற்கும் கிடைக்கும். ஆனால், தற்போது எதிர்ப்பு ஓட்டுகள், நடுநிலையாளர்களின் ஓட்டுகள் பா.ஜ.,விற்கு கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
தமிழகம் முழுதுமே தி.மு.க.,விற்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனால், மக்கள் அ.தி.மு.க.,வை தான் ஆதரிப்பர். எங்கள் கூட்டணிக்கு தான் ஓட்டுகள் கிடைக்கும்.
தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை பிரித்துக் கொடுத்துள்ளனர். இந்த வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி அடைந்துஉள்ளது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வெற்றி பெறும் அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை.
கடந்த தேர்தல்களில் மஞ்சள் சட்டை அணிந்து தான் ஓட்டு சேகரித்தீர்கள்; அனைத்து நிகழ்ச்சியிலும் பங்கேற்றீர்கள். ஆனால், இப்போது மஞ்சள் சட்டையை காணவில்லையே?
மஞ்சள் நிறம் குரு பகவானுக்கு உகந்தது. வீட்டில் இருந்தால் எப்போதும் மஞ்சள் துண்டு அணிவேன். வீட்டில் மஞ்சள் சட்டைகள் உள்ளன. தேவைப்பட்டால் மீண்டும் மஞ்சள் சட்டை அணிவேன்.
வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வெற்றி பெறுவார். அதேபோல், அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்.
அ.தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெறுபவர்கள், மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பீர்களா?
எங்கள் எம்.பி.,க்கள் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். நமக்கு என்ன தேவையோ அதற்காக போராடுவர்.
வாசகர் கருத்து