கண்ணுக்கு தெரியாத அதிருப்தி
கடந்த 2017 முதல் 2021 வரை தமிழகம் ஏகப்பட்ட போராட்டங்களை பார்த்தது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், சென்னை - சேலம் விரைவுச்சாலை, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போராட்டங்கள் அவற்றில் சில. ஜல்லிக்கட்டு தவிர மற்ற போராட்டங்கள் தி.மு.க., ஏவிவிட்டு, அதன் தோழமை அமைப்புகள் நடத்தியவை. சில போராட்டங்களில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் பங்கேற்றார்.
அவர்களது குறி, மாநில அ.தி.மு.க., மற்றும் மத்திய பா.ஜ., அரசுகள். தி.மு.க., அரசியல் பலனுக்காக அப்போது ஏற்படுத்திய சூழ்நிலையால், தொழிலுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எதிரான ஒரு கண்ணோட்டம், தமிழகத்தில் முதல்முறையாக உருவானது. அதனாலேயே, பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதை தவிர்த்தன. இன்றும் தவிர்க்கின்றன.
தி.மு.க., உருவாக்கிய கலாசாரம், இன்று பல சிப்காட் மற்றும் வளர்ச்சி திட்ட எதிர்ப்பு போராட்டங்களாக மாறி இருக்கின்றன. இந்த போராட்டங்கள் எந்த அரசியல் துாண்டலும் இல்லாதவை. இவற்றை தன் ஊடக பலத்தால் தி.மு.க., வெற்றிகரமாக இருட்டடிப்பு செய்துவிட்டது. இந்த போராட்டங்களை நடத்துவோரை சமாதானப்படுத்துவது என்ன, அவர்களிடம் பேசுவது கூட இல்லை. இப்படி நடந்துவரும் சில போராட்டங்கள் இவை:
செய்யாறு சிப்காட்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோட்டில் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு, 1,613 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 13 நிறுவனங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மீண்டும் சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக் குடிசை, நெடுங்கல் உள்ளிட்ட, 11 கிராமங்களில், 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதை எதிர்த்து அங்கே போராட்டம் வெடித்துள்ளது. 270 நாட்களுக்கு மேலாக காத்திருப்பு போராட்டத்தில் இந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நர்மா பள்ளத்தை சேர்ந்த விவசாயி தணிகைவேல், “அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்கள் நிறைய உள்ளன. அவற்றை கையகப்படுத்தி தொழிற்சாலை அமைக்கலாம். அதை விட்டுவிட்டு, மூன்று போகம் விளையும் எங்கள் விவசாய நிலத்தை அழித்து தொழிற்சாலை கொண்டு வர, தி.மு.க., அரசு துடிக்கிறது. எங்கள் நிலத்தை கையகப்படுத்துவதை நிறுத்தும் வரை தொடர்ந்து போராடுவோம்,” என்று கொதித்தார்.
இந்த போராட்டத்தில் பங்குபெற்ற விவசாயிகளில் ஏராளமானோரை கடந்த ஆண்டு நவ., 4ம் தேதி, 500க்கும் மேற்பட்ட போலீசார் விரட்டியடித்தனர். விவசாயிகள், ஏழு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின், பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து செய்யப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
நாமக்கல் சிப்காட்
நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகாவில் புறம்போக்கு நிலம் அதிகம் உள்ள பகுதிகளான என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், பரளி, லத்துவாடி கிராமங்கள் சிப்காட்டுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த புறம்போக்கு நிலங்களை நம்பி ஏராளமான கால்நடை வளர்ப்போர் உள்ளனர். நல்ல வளமான மேய்ச்சல் நிலங்களே, 150 ஏக்கர் அளவில் உள்ளன. தவிர, இங்குள்ள கஸ்துாரி மலையை சுற்றியுள்ள மூன்று ஏரிகள் வாயிலாக, 500 ஏக்கர் விளை நிலைங்கள் பாசனம் பெறுகின்றன.
சிப்காட் அமைந்தால், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் பறிபோவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று இங்கு உள்ளோர் கருதுகின்றனர். சிப்காட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், “வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு நீர் ஆதாரம் முற்றிலும் அழிந்துவிடும்.
மேய்ச்சல் நிலங்களை நம்பி, ஆயிரக்கணக்கான கால்நடைகளை வளர்க்கின்றனர். சிப்காட் வந்தால், இந்த பகுதியில் பால் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படும். நேரடியாக, 25,000 பேரும், மறைமுகமாக 15,000 பேரும் பாதிக்கப்படுவர்,” என்றார்.
கடந்த 2021 டிசம்பரில், இதற்கு எதிரான முதல் போராட்டம் நடந்தது. அதன்பின், 56 போராட்டங்கள் நடந்துவிட்டன. அரசு இதுவரை இவர்கள் கவலையை போக்க முயலவில்லை.
கிருஷ்ணகிரி 5வது சிப்காட்
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி பஞ்சாயத்துகளில், 5வது சிப்காட் அமைக்க, 3,034 ஏக்கர் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதில், 1,500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள். இந்த திட்டத்தால் 30,000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, உள்ளூர்வாசிகள் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினர்.
ஆனால், கண்டுகொள்ளாத அரசு, முதற்கட்ட நில எடுப்பின்போது, நெருப்புக்குட்டை கிராமத்தில், 27.5 ஏக்கர் விவசாய நிலங்களை சேர்த்துக் கொண்டது.
இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி சத்தியநாராயணன், “27.5 ஏக்கர் விவசாய நிலங்களை விடுவித்து அரசாணை வெளியிட வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட 12 வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., பிரகாஷிடம் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
கரடிக்குட்டையை சேர்ந்த சிதம்பரம், “ஜி.எம்.ஆர்., நிறுவனத்தின் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களை மட்டுமே சிப்காட்டிற்கு எடுக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. சிப்காட்டிற்கு விவசாய நிலங்கள் எவ்வளவு ஏக்கர் எடுக்கப்படுகிறது என்பதை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. ஜி.எம்.ஆர்., நிறுவனத்தின் நிலத்தை எடுக்க அரசாணை வெளியிடும்போது, விவசாய நிலங்கள் குறிப்பிட்ட அளவை கையகப்படுத்த அரசாணை வெளியிடுகின்றனர். இது பெரும் மோசடிக்கு சமமானதாகும்,” என்று கொதித்தார்.
மேலும், இந்த நிலத்தை விற்பனை செய்ய முடியாத அளவிற்கு, பத்திரப்பதிவுத் துறை தற்போது வரை தடை செய்து வைத்துள்ளது. இதை கண்டித்து கடந்தாண்டு ஜன., 5 முதல் ஜூன், 19 வரை, 166 நாட்கள் உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே, விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தன. ஆனால், கோரிக்கைகளை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை.
பரந்துார் விமான நிலையம்
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் தாலுகாக்களில் 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. விமான நிலையம் அமையவுள்ள 20 கிராமங்களில் 3,774 ஏக்கர் பட்டா நிலங்களும், 1,972 ஏக்கர் அரசு நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 700 ஏக்கர் நீர்நிலைகள். அனைத்தும் வளமான விளைநிலம்.
நெல்வாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி குணா, “ஏரி நீர் பாசனத்தை நம்பி கணிசமான நெல் உற்பத்தி செய்து வருகிறோம். வீடு, ஆடு, மாடுகள் என, ஒட்டுமொத்த விவசாயி என்கிற அடையாளமாக இங்கு வாழ்ந்து வருகிறோம். பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் மற்றும் வீடுகளை காலி செய்யச் சொன்னால், எங்கு சென்று எங்கள் வாழ்வாதாரத்தை துவங்குவது? இங்கு இருக்கும் நிலம், வீடுகள் போல புதிய இடத்தில் கிடைக்குமா? நெல்வாய் எனும் கிராமத்தில் வாழ்ந்தோம் என, அடையாளமே இல்லாமல் அழிக்கப்படும்,” என்றார்.
திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே போராட்டம் தொடங்கிவிட்டது. 600 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இருப்பினும், கண்டுகொள்ளாத அரசு, நில எடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
திருஆரூரான் சர்க்கரை ஆலை
இதற்கு முன் குறிப்பிட்ட போராட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் சார்ந்தது என்றால், இந்த போராட்டம் விவசாயிகளின் உரிமை சார்ந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில் உள்ளது திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை. இதன் நிர்வாகம் மாறிவிட்டது. கல்ஸ் சாராய உற்பத்தி நிறுவனம் இதனை வாங்கி உள்ளது. பழைய நிர்வாகம், 2015 முதல் 2018 வரை விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கு பணம் கொடுக்கவில்லை. அந்த நிலுவை தொகையை, புதிய நிர்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 2022 நவ., 30 முதல் 490 நாட்களாக கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம், அந்த பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை வழிமறித்து தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். 'கடிதம் கொடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இப்படி தமிழகம் முழுவதும் வெளியில் தெரியாமல் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டம் செய்வோரை சமாதானப்படுத்தி, அவர்களுக்கு நியாயமானதை செய்து கொடுக்காத தி.மு.க., அரசு, வழக்கு, குண்டர் சட்டம் என முரண்பாடான போக்கை கையில் எடுத்துள்ளது. கடந்த பிப்., 16ல், சட்டசபையில், 'செய்யாறு சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியோர், விவசாயிகளே இல்லை' என, அமைச்சர் வேலு கூறி, செய்யாறு விவசாயிகளின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார். இதுதான் அரசின் அணுகுமுறையாக உள்ளது. போராட்டக்காரர்கள், தங்களிடம் இப்போது இருக்கும் ஒரே ஆயுதம் லோக்சபா தேர்தல் என, நம்புகின்றனர்.
வாசகர் கருத்து